போர் நிறுத்தம் பற்றி ட்ரம்ப் கருத்து: மோடி ஏன் மறுப்பு தெரிவிக்கவில்லையென செல்வ பெருந்தகை கேள்வி
போர் நிறுத்தம் தொடர்பாக ட்ரம்ப் கூறிய கருத்துகளுக்கு மோடி ஏன் மறுப்பு தெரிவிக்கவில்லையெனக் காங்கிரஸ் மாநில தலைவர் செல்வ பெருந்தகை தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சட்டப்பேரவை பொது கணக்குகள் குழுவின் ஆய்வுக்கூட்டம் அதன் தலைவர் செல்வபெருந்தகை தலைமையில் நடைபெற்றது.
இதில் கோவை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்கள் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வுகள்குறித்து, மாவட்ட ஆட்சியர் பவன்குமார், உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள், அலுலர்களுடன் ஆலோசிக்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த செல்வ பெருந்தகை கூறியதாவது: ஆய்வு கூட்டத்தில் பல்வேறு பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளது.
இந்தியா-பாகிஸ்தான் போர் தொடர்பாக வெளிநாடுகள் தலையீடு இல்லையெனக் கூறுவதற்கு பிரதமருக்கு என்ன தயக்கம்? ட்ரம்ப் கூறிய கருத்துகளுக்கு ஏன் மறுப்பு தெரிவிக்கவில்லை.
எங்கள் நாட்டு விவகாரத்தில் தலையிடுவதற்கு நீங்கள் யாரென ஏன் கேட்கவில்லை? வாஜ்பாய், இந்திரா காந்தி ஆகியோர் முந்தைய காலங்களில் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள்.
அமெரிக்கா அதிபருக்கும் இந்தப் போர் நிறுத்தத்திற்கும் சம்பந்தமில்லையென ஏன் வாய் திறக்க மறுக்கிறார்கள்? ராகுல் காந்தி கேட்ட கேள்விகளுக்கு நேரடியாக அவர் பதில் கூற வேண்டும்.
ஆணவ படுகொலைகளுக்கு எதிரான சட்டத்தை இயற்ற வேண்டும் எனக் காங்கிரசும் வலியுறுத்தி வருகிறது. 2014 ஆம் ஆண்டே இது தொடர்பாக வலியுறுத்தி வந்தோம், பாஜக இதனைச் சட்டமாக ஏன் நிறைவேற்றவில்லை என்றார்.