கோவை மாநகராட்சி மாமன்ற கூட்ட அரங்கு முன் கூடிய பொதுமக்களால் பரபரப்பு..!
கோவை மாநகராட்சி 86 -வது வார்டில் அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி அன்புநகர் பகுதி மக்கள் மாநகராட்சி மாமன்ற கூட்டரங்கு நுழைவு வாயிலில் கூடி கோசமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரண கூட்டம் மேயர் ரங்கநாயகி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 58 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முன்னதாகக் கோவை மாநகராட்சி 86 -வது வார்டுக்கு உட்பட்ட அன்புநகர், ரோஸ்கார்டன் பகுதி மக்கள் திடீரென மாமன்ற கூட்டம் நடைபெறும் அரங்கம் முன்பு கூடினர்.
மேலும் தங்கள் பகுதியில் பல்வேறு பிரச்சனைகள் உள்ளதாகவும், இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளரை நேரில் சந்தித்து கோரிக்கைகளைக் கூற வேண்டும் எனத் தெரிவித்தனர்.
அப்போது தங்கள் பகுதி பிரச்சனைகள்குறித்து அங்கிருந்த மாநகராட்சி ஊழியர்களிடமும் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரிடமும் தெரிவித்து தாங்கள் ஆணையாளரை நேரில் சந்திக்க வேண்டும் என வலியுறுத்திக் கோசம் எழுப்பி நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது: கோவை மாநகராட்சி 86 -வது வார்டுக்கு உட்பட்ட அன்பு நகர், ரோஸ் கார்டன் பகுதியில் பாதாள சாக்கடை பணிக்காக ரூ.30 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ஆனால் 25 சதவீத பணிகள் மட்டுமே நிறைவடைந்த நிலையில் பணம் இல்லையெனக் கூறிவிட்டு ஊழியர்கள் சென்று விட்டனர். இதனால் அவ்வழியாகச் செல்வோர் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகின்றோம்.
அதேபோல் எங்கள் வார்டில் தான் நாய் கருத்தடை மையம், கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம், ஆடு அறுக்கும் இடம், மீன் சந்தை, சலவைப் பணிகள் மேற்கொள்ளும் இடம் என அதிகளவு கழிவுகள் சேரும் பகுதியாக உள்ளது.
பல்வேறு பகுதிகளில் சாலை பணிகள் மேற்கொள்ள வேண்டும். ஆனால் தமிழக அரசு கடந்த நான்கு ஆண்டுகளாக எங்கள் பகுதிக்கு எந்தப் பணிகளையும் செய்யவில்லையென குற்றம் சாட்டினார்.