தண்ணீர் தொட்டியில் விழுந்து யானை உயிரிழந்த பரிதாபம்!
கோயம்புத்தூர் காருண்யாநகர் அருகே விவசாய தோட்டத்தில் இருந்த 25 அடி தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த ஆண் காட்டு யானை பரிதாபமாக உயிரிழந்தது.
கோயம்புத்தூர் ஆர்.எஸ் புரம் பகுதியைச் சேர்ந்தவர் நிர்மலா தேவி (55). இவருக்குக் கோவை காருண்யா நகர், சப்பானிமடையில் சுமார் 10 ஏக்கர் தென்னந்தோப்பு உள்ளது. அதனைப் பாலாஜி என்பவர் குத்தகைக்கு பெற்றுள்ளார்.
இந்த நிலையில் அதிகாலை வனப்பகுதியிலிருந்து வெளியேறிய காட்டு யானைகள், வழி தவறி இவரின் தோட்டத்தின் வழியே சென்றுள்ளது.
அப்போது சுமார் 10 வயது, ஆண் காட்டு யானை அங்கு, பயன்பாட்டில் இல்லாமல், கைவிடப்பட்ட சுமார் 25 அடி ஆழமுள்ள தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்ததாகத் தெரிகிறது.
தொட்டியில் 20 அடி ஆழத்திற்கு தண்ணீர் இருந்துள்ளது. இந்நிலையில் அவ்வழியாக ரோந்து சென்ற வனத்துறையினர் பார்த்தபோது, தண்ணீர் தொட்டியில் உயிரிழந்த நிலையில் யானை இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து உடனடியாக வனத்துறை உயரதிகாரிகள் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் மற்றும் வனத்துறை ஊழியர்கள், போலீசார் இணைந்து 3 பொக்லைன் இயந்திரங்கள் மூலமாகக் காட்டு யானையைத் தண்ணீர் தொட்டியிலிருந்து மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
சுமார் 3 மணி நேரம் போராடி, தண்ணீர் தொட்டியில் இறந்த நிலையில், இருந்த காட்டு யானை உடல் மீட்டனர்.
பின்னர் யானையின் உடல் டிப்பர் லாரிமூலம் சாடிவயல் வனப்பகுதிக்கு எடுத்துச் செல்லப்பட்டு கால்நடை மருத்துவர் குழுவினர் முன்பு பிரேத பரிசோதனை நடைபெற்றது