கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்த பொருட்களை ஜப்தி செய்ய வந்த நீதிமன்ற ஊழியர்கள்..!
கோவை கணபதியில் வீட்டுவசதி வாரியத்தால் கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கான தொகையைக் கொடுக்காததால், ஆட்சியர் அலுவலகத்தில் இருந்த பொருட்களை ஜப்தி செய்ய வந்த நீதிமன்ற ஊழியர்களால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை கணபதியை சேர்ந்தவர் ராமசாமி. அதே பகுதியில் உள்ள இவருக்குச் சொந்தமான 18 ஏக்கர் நிலத்தைக் கடந்த 1989 ஆம் ஆண்டு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் கையகபடுத்தியுள்ளது.
மேலும் அதற்கான தொகையில் 25 சதவீதம் மட்டுமே கொடுத்த நிலையில் மீதம் உள்ள தொகையை வழங்காமல் இருந்ததாகத் தெரிகிறது.
இதையடுத்து ராமசாமி தரப்பு கோவை இரண்டாவது சார்பு கூடுதல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். விசாரணை நிறைவடைந்த நிலையில் உரிய தொகையை வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.
இந்நிலையில் தொடர்ந்து ரூ.1.83 கோடி தொகையை வழங்காததால் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அம்மதிப்பிலான பொருட்களைச் சப்தி செய்யக் கடந்த 17 ஆம் தேதி நீதிபதி உத்தரவிட்டார்.
இந்நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பொருட்களை ஜப்தி செய்ய நீதிமன்ற ஊழியர்கள் மனு தாரருடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து ஆட்சியர் அலுவலகத்தில் இருந்த அதிகாரிகள் நீதிமன்ற ஊழியர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
இதையடுத்து ஆகஸ்ட் 26 க்குள் பணத்தை வழங்குவதாக அரசு தரப்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனால் நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி நடவடிக்கைகளைக் கைவிட்டு சென்றனர்.