மாநகராட்சி மாமன்ற கூட்டம்: 58 தீர்மானங்கள் நிறைவேற்றம்
கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற மாமன்ற சாதாரணக் கூட்டத்தில் புதிய திட்டப்பணிகள் மற்றும் அபிவிருத்தி பணிகள் தொடர்பாக 58 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
*5 மண்டலங்களில் 108 ஆம்புலென்ஸ் ஓட்டுநர்களுக்கு ஓய்வு அறை அமைக்க மேயர் சிறப்பு நிதியிலிருந்து நிதி ஒதுக்கித் தீர்மானம்*
கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள மாநகராட்சி பிரதான அலுவலகத்தில், மாமன்ற சாதாரணக் கூட்டம் மேயர் ரங்கநாயகி தலைமையில் நடைபெற்றது.
இதில் புதிய மழை நீர் வடிகால், பல்வேறு திட்டப் பணிகள், அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்வது உள்ளிட்ட 58 தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டு, நிறைவேற்றப்பட்டது.
அப்போது 86 ஆவது வார்டில் உள்ள நாய்கள் கருத்தடை மையத்தை மேம்படுத்த ரூ.62 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கு 84 மற்றும் 86 ஆவது வார்டு உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அங்குள்ள கருத்தடை மையத்தை அகற்ற வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர்.
அதே போல வார்டுகளில் உள்ள சாலை பிரச்சனை, குடிநீர் தாமதம், குப்பை அகற்றுதல், அங்கீகரிக்கப்படாத வீட்டுமனைகளுக்கான வரி உயர்வைக் குறைக்க வேண்டும், உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள்குறித்து வார்டு கவுன்சிலர்கள் கேள்வி எழுப்பினர்.
வார்டு கவுன்சிலர்கள் கேள்விகளுக்கு மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் விளக்கமளித்தார்.
அதே போலக் கோவை மாநகராட்சியில் இரவு, பகலாகப் பணியாற்றி வரும் 108 ஆம்புலென்ஸ் ஓட்டுநர்கள், உதவியாளர்களுக்கான குளியல், கழிவறையுடன் கூடிய ஓய்வு எடுக்கும் அறை 5 மண்டலங்களிலும் அமைக்க மேயர் சிறப்பு நிதியிலிருந்து நிதி ஒதுக்கீடு செய்யவும், முதல் கட்டமாக மண்டலத்திற்கு தலா ஒன்று அமைக்க முடிவு செய்யப்பட்டது.