நாய் கருத்தடை மையத்தை அகற்றக் கோரி தர்ணாவில் ஈடுபட்ட பெண் கவுன்சிலர்!
கோவை புல்லுக்காடு பகுதியில் உள்ள நாய் கருத்தடை மையத்தை அகற்றக் கோரி பெண் வார்டு கவுன்சிலர் தனியாக அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் சாதாரணக் கூட்டம் மேயர் ரங்கநாயகி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த 84 ஆவது வார்டு உறுப்பினர் அலீமா பேகம், புல்லுகாடு பகுதியில் உள்ள நாய் கருத்தடை மையத்தை அகற்ற கோரி கையில் பதாகைகள் ஏந்தி வந்து மாநகராட்சி அலுவலக வளாகத்தில் கோசமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.
இதுகுறித்து அலீமா பேகம் கூறியதாவது: கரும்புக்கடை, புல்லுக்காடு பகுதிகளில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. பள்ளிக் குழந்தைகள், பெண்களை நாய்கள் கடித்து அச்சுறுத்தி வருகிறது, பல முறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை.
மேலும் புல்லுக்காடு பகுதியில் உள்ள கருத்தடை மையத்திற்கு கொண்டு வரப்படும் நாய்கள் கருத்தடை செய்தபின்னர் இதே பகுதியில் விடுவிக்கின்றனர். பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள கருத்தடை மையத்தை அகற்ற வேண்டும்.
அதே போல இப்பகுதியில் இறைச்சி வெட்டும் மையம், நாய் கருத்தடை மையம், கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம், குப்பை மேடுகள் உள்ளது இதனால் சுதாகார சீர்கேடு ஏற்பட்டு வருவதாகவும், அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
Thanks & Regards