யானை தாக்கி உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்கினார் எஸ்.பி.வேலுமணி..!
கோவை தொண்டாமுத்தூரில் காட்டு யானைத் தாக்கி உயிரிழந்த பெண்களின் குடும்பத்தினரை முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நரசிபுரத்தை சேர்ந்த செல்வி என்ற பெண் கடந்த 17 ஆம் தேதி காட்டு யானை தாக்கி உயிரிழந்தார். அதே போல விரலியூரை சேர்ந்த ரத்தினா என்ற பெண் கடந்த 24 ஆம் தேதி காட்டு யானை தாக்கி உயிரிழந்தார்.
இவ்வாறு அடுத்தடுத்து இரண்டு பெண்கள் காட்டு யானைகள் தாக்கி உயிரிழந்த நிலையில், யானை தாக்கி உயிரிழந்தவர்கள் வீட்டிற்குச் நேரில் சென்ற அத்தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், முன்னால் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி அவர்களது உறவினர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார். தொடர்ந்து அவர்களுக்குத் தனது சொந்த நிதியிலிருந்து நிதியுதவி வழங்கினார்.
பின்னர் அங்கே இருந்தவாறு வனத்துறை அதிகாரியைத் தொடர்பு கொண்டு பேசிய அவர் மீண்டும் இதே போலச் சம்பவம் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார்.
இந்த நிகழ்வின்போது அதிமுக கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக துணைச் செயலாளர் செல்வதுரை, அம்மா பேரவை இணைச் செயலாளர் விஜயகுமார், பேரூர் ஒன்றிய கழகச் செயலாளர் ராமமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.