காட்டு யானை தாக்கி சிகிச்சை பெற்ற பெண் உயிரிழப்பு!
கோவை விராலியூர் அருகே காட்டு யானை தாக்கியதில் படுகாயமடைந்து, கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கோவை நரசீபுரம் அடுத்த விராலியூர் இந்திரா காலனியைச் சேர்ந்தவர் ரத்தினா (51), இவர் காட்டு வேலை செய்து வந்தார். இந்நிலையில் நேற்று ரத்தினா அதிகாலை வீட்டின் அருகே காலைக்கடன் கழிக்க சென்றதாகத் தெரிகிறது.
அப்போது வனப்பகுதியிலிருந்து வெளியேறி இருந்த ஒற்றைக் காட்டு யானை ரத்தினா தாக்கியது. இதையடுத்து அவரை மீட்ட வனத்துறையினர், கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட ரத்தினா நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
நெஞ்சு பகுதியில் ஏற்பட்ட எலும்பு முறிவு மற்றும் அதிக ரத்தப்போக்கு காரணமாக அவர் உயிரிழந்த நிலையில் உடல் பிரேத பரிசோதனைக்குப் பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது.