ஆடி அமாவாசை: பேரூர் படித்துறையில் குவிந்த பக்தர்கள்
ஆடி அமாவாசையை முன்னிட்டு கோவை பேரூர் படித்துறையில் குவிந்த ஏராளமான பக்தர்கள், தங்கள் மூதாதையர்களுக்குத் தர்ப்பணம் செய்தனர்.
முக்தி ஸ்தலம் என்று பக்தர்களால் அழைக்கப்படும் கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயிலுக்குக் கோவை சுற்றுவட்டார பகுதிகள் மட்டுமல்லாமல், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
குறிப்பாக அமாவாசை நாட்களில் இங்குள்ள நொய்யல் ஆற்றங்கரையில் தங்கள் மூதாதையர்களுக்குத் தர்ப்பணம் செய்து வழிபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஆடி அமாவாசையை முன்னிட்டு பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தங்கள் மூதாதையர்களுக்குத் தர்ப்பணம் செய்தனர்.
அண்மையில் பயன்பாட்டிற்கு வந்த புதிய தற்பண மண்டபத்தில் நீண்ட நேரம் காத்திருந்து பொதுமக்கள் தர்ப்பணம் செய்தனர்.
மேலும் தர்பணம் செய்ய வரும் பக்தர்கள் வாழை இலை உள்ளிட்ட பொருட்களை ஆற்றில் வீசாமல் தவிர்க்கும் வகையில் பேரூராட்சி ஊழியர்கள், தன்னார்வலர்கள் பணியில் வைக்கப்பட்டு அக்கழிவுகளை பெற்று அகற்றினர்.