கோவை அரசு கல்லூரியில் இலவச யு.பி.எஸ் .சி பயிற்சி வகுப்புகள் துவக்கம்..!
கோவை அரசு கலைக் கல்லூரியில் வளாகத்தில், 2025-26 கல்வியாண்டிற்கான இலவச யு.பி.எஸ்.சி பயிற்சி வகுப்புகள் இன்று முதல் துவங்கியது, இதில் சுமார் 250 மாணவ, மாணவிகள் இணைத்துள்ளனர்.
கோவை அரசு கலைக் கல்லூரியில் கடந்த 2014 -ம் ஆண்டு முதல் இலவச யு.பி.எஸ்.சி தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து கோவை அரசு கல்லூரியில் பயின்று வரும் மாணவர்கள், போட்டித் தேர்வுக்குத் தயாராகி வருகின்றனர்.
இக்கல்லூரி பேராசிரியர் கனகராஜ் மற்றும் பிற ஆசிரியர்கள் வகுப்புகளை எடுப்பதால் ஆர்வத்துடன் மாணவர்கள் போட்டித் தேர்வுகளுக்குத் தாயாராகி வருகின்றனர்.
2025-26 கல்வியாண்டில் கோவை அரசுக் கலை கல்லூரியில் 1,961 மாணவ, மாணவிகள் சேர்ந்துள்ளனர். அதில் சுமார் 250 மாணவ, மாணவிகள் யு.பி.எஸ்.சி இலவச பயிற்சி வகுப்பில் சேர்ந்துள்ளனர். வார நாட்களில் நடைபெற உள்ள பயிற்சி வகுப்புகள் இன்று முதல் துவங்கியுள்ளது.
இதுகுறித்து கல்லூரி முதல்வர் யாழினி கூறியதாவது: 2014 முதல் கோவை அரசு கலைக் கல்லூரியில் யு.பி.எஸ்.சி தேர்வுக்குத் தயாராகும் இலவச பயிற்சி வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகிறது. அரசியல் அறிவியல் துறை தலைவர் கனகராஜ் இந்தப் பயிற்சி வகுப்புகளை எடுத்து வருகிறார்.
நடப்பு கல்வியாண்டின் முதல் நாளே சுமார் 250 மாணவ, மாணவிகள் கலந்து ஐ.ஏ.எஸ். கனவு பயணத்தைத் துவங்கியுள்ளனர். மேலும் ஏழை, எளிய முதல் தலைமுறை பட்டதாரி குடும்ப குழந்தைகளுக்கு அதிக பயனைக் கொடுத்து வருகிறது.
மேலும் எங்கள் மாணவர் இந்திய துணை கண்டம் முழுவதும் ஆட்சியாளர்களாக, பெரும் அதிகாரிகளாக இருப்பார்கள் என்ற கனவு உள்ளது எனத் தெரிவித்தார்.