மதுரை ஆதீனம் மீதான அடக்குமுறையைத் திமுக அரசு கைவிட வேண்டும் – வானதி சீனிவாசன்
இந்தியாவின் மிகப் பழமையான மனங்களில் ஒன்றான, மதுரை ஆதீனத்தின் 293 வது பீடாதிபதி ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஞானசம்பந்த தேசிக சுவாமிகள்மீது, இந்து விரோத திமுக அரசு அடக்குமுறையை ஏவி விட்டிருக்கிறது.
கடந்த மே 2ம் தேதி சென்னை, காட்டாங்கொளத்தூரில் நடைபெற்ற, உலக சைவ சித்தாந்த மாநாட்டில் பங்கேற்க மதுரை ஆதீனம் காரில் சென்றார்.
அப்போது உளுந்தூர்பேட்டை அருகே, அவரது கார் விபத்தில் சிக்கியது. இது தன்னை கொல்ல நடந்த சதி என்றும், விபத்தை ஏற்படுத்திய காரில் இருந்தவர்களின் அடையாளங்களையும் கூறியிருந்தார்.
அதைத்தொடர்ந்து மதுரை ஆதீனம் மீது வழக்குப் பதிவு செய்த இந்து விரோத திமுக அரசு, அவரைக் கைது செய்யத் தீவிர முயற்சி மேற்கொண்டது. அவருக்கு முன் ஜாமீன் வழங்கிய உயர் நீதிமன்றம், அவர் வசிக்கும் இடத்திற்கே சென்று விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டது.
விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை எனக்கூறி மதுரை ஆதீனத்தின் முன் ஜாமினை ரத்து செய்ய வேண்டுமென, உயர்நீதிமன்றத்தில் காவல்துறை மனு தாக்கல் செய்திருக்கிறது.
வயது முதிர்ந்த, உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள மதுரை ஆதீனத்தை எப்படியாவது கைது செய்து, கொடுமைப்படுத்த வேண்டும் என்பதில் திமுக அரசு உறுதியாக இருப்பது தெரிகிறது.
அவுரங்கசீப் ஆட்சி காலத்தில் கூட நடக்காத கொடுமைகள் எல்லாம், திமுக ஆட்சியில் நடக்கிறது. மதுரை ஆதீனம் மீதான அடக்குமுறையைத் திமுக அரசு கைவிட வேண்டும்.