திடீர் வெள்ளப் பெருக்கு – கோவை குற்றாலம் அருவி மூடல்
கோவை குற்றாலம் அருவியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கு காரணமாக அருவியில் குளிக்கப் பொதுமக்களுக்குத் தடை விதிக்கப்படுவதாக வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.
கோவை மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றான கோவை குற்றாலம் அருவியில் குளிக்கத் தினமும் பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரங்களில் பெய்து வரும் தொடர் மழை காரணமாகத் திடீரெனக் குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதையடுத்து குற்றாலம் அருவி மூடப்படுவதாகவும், சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்படுவதாகவும் வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.
கடந்த மே மாத இறுதியில் பெய்த தொடர் மழை காரணமாகச் சுமார் 48 நாட்கள் குற்றாலம் அருவி மூடப்பட்டது.
தொடர்ச்சியாகக் கடந்த 11ம் தேதி முதல் மீண்டும் குற்றாலம் அருவி திறக்கப்பட்ட நிலையில், மீண்டும் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.