தனியார் கிடங்கில் பெட்டி, பெட்டியாக இருந்த காலாவதியான பேரிச்சம்பழங்கள் – உணவு பாதுகாப்பு துறை அதிர்ச்சி
கோவை ஒத்தக்கால் மண்டபம் பகுதியில் தனியார் டெலிவரி நிறுவன கிடங்கில் வைத்திருந்த சுமார் 278 கிலோ காலாவதியான பேரிச்சம் பழங்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர்.
கோவை ஒத்தக்கால் மண்டபம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் டெலிவரி நிறுவனத்தின் கிடங்கில் கோவை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீரென ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது உள்ளே இருந்த ஒரு பகுதியில் இரண்டு மாதங்களுக்கு முன்பே காலாவதியான பேரிச்சம் பழங்கள் பெட்டியில் அடுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து அங்கிருந்த சுமார் 278 கிலோ பேரிச்சம் பழங்களை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து மீண்டும் பயன்படுத்தாதவாறு கிருமி எதிர்ப்புத் திரவியங்கள் ஊற்றி அழித்தனர்.
மேலும் மே-19ஆம் தேதியே பேரிச்சம் பழத்திற்கான காலாவதி நேரம் முடிந்த நிலையில், இரண்டு மாதம் அதே கிடங்கில் வைத்திருந்ததோடு, காலாவதியான பொருட்கள் என்பதற்கான அறிவிப்பு பலகையும் ஏன் வைக்கவில்லை? என்பது குறித்து விளக்கம் கேட்டு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.