துணைக் குடியரசுத் தலைவர் ராஜினாமா மனு ஏற்பு.!
குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கரின் ராஜினாமாவை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஏற்றுக்கொண்டதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
குடியரசு துணைத் தலைவரும், மாநிலங்களவைத் தலைவருமான ஜெகதீப் தன்கர் திங்கள்கிழமை தனது பதவியை ராஜினாமா செய்தார். இது தொடர்பாகக் குடியரசுத் தலைவருக்குக் கடிதம் அனுப்பிய அவர், அதன் நகலைக் குடியரசு துணைத் தலைவருக்கான எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டார்.
இதையடுத்து, அவர் மாநிலங்களவைக்கு வரவில்லை. அவருக்குப் பதில், மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் அவையை நடத்தினார். மாநிலங்களவை ஒத்திவைப்புக்குப் பின் ஹரிவன்ஷுக்குப் பதிலாக அவையை நடத்திய பாஜக எம்பி கன்ஷ்யாம் திவாரி, “குடியரசு துணைத் தலைவரின் ராஜினாமாவை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஏற்றுக்கொண்டார்.
இது தொடர்பான அறிவிப்பை உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, அரசியலமைப்பின் 67ஏ பிரிவின் கீழ் ஜெகதீப் தன்கரின் ராஜினாமா உடனடியாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார். குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் (74) நேற்று அனுப்பிய கடிதத்தில், மருத்துவ ரீதியான காரணங்களுக்காகக் குடியரசுத் துணைத் தலைவர் பொறுப்பிலிருந்து நான் விலகுகிறேன்.
எனது பணியில் நான் கவனம் செலுத்த எனக்கு ஆதரவு கொடுத்த குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மிகுந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தப் பணியில் நான் பெற்ற அனுபவங்கள் மகத்தானது. இந்தப் பணி காலத்தில் இந்தியாவின் குறிப்பிடத் தக்க பொருளாதார முன்னேற்றத்தையும், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிவேக வளர்ச்சியையும் நேரில் கண்டு, அதில் பங்கேற்றதை பாக்கியமாகக் கருதுகிறேன். தேசத்தின் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த இந்தச் சகாப்தத்தில் பணி செய்ததை கவுரவமாகக் கருதுகிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.