மாணவி தற்கொலைக்கு காரணமான நபர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனு!
கோவை தனியார் கல்லூரி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட மகளின் மரணத்திற்கு காரணமான இளைஞரிடம் விசாரிக்கக் கோரி பெற்றோர் போலீசாரிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஹெலன் ரூபிலா (19). இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு மைக்ரோ பயாலஜி படித்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை ஹெலன் ரூபிலா தனது விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் தொடர்பாகக் காட்டூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் மகளின் தற்கொலைக்குக் காரணமான இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாணவியின் பெற்றோர் காட்டூர் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.
இது குறித்து பேசிய பெற்றோர்: மகளின் தற்கொலைக்கு காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரிக்க வேண்டும். மகளின் செல்போனை ஆய்வு செய்து யாரிடம் பேசினார் என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என தெரிவித்தனர்.
அதே போல் இது குறித்து பேசிய மாணவியின் சகோதரர்: தங்கையிடம் அடிக்கடி செல்போனில் பேசிக் கொண்டிருந்த நபர் குறித்தும், அவர்களிடையே ஏற்பட்ட பிரச்சினைகள் குறித்தும் போலீஸிடம் கூறியுள்ளேன்.
ஆனால் இதுவரை அந்த நபரை போலீசார் அழைத்து விசாரிக்கவில்லை. உடனடியாக அந்த நபரை அழைத்து விசாரிக்க வேண்டும், தற்கொலைக்கு காரணமான நபர்களை கைது செய்ய வேண்டும் என தெரிவித்தார்.