அரசு போக்குவரத்து ஊழியர்கள் தர்ணா போராட்டம்!
போக்குவரத்து ஓய்வூதியர்களின் 23 மாத பண பலன்களை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் பேருந்து பணிமனை முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய 23 மாத கால பண பலன்களை வழங்க வேண்டும், தேர்தல் கால வாக்குறுதியான பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு தொழிற்சங்க போக்குவரத்து ஊழியர்கள், ஓய்வூதியர்கள் கோவை சுங்கம் அரசுப் பேருந்து பணிமனை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முன்னதாகக் கேரளாவில் காலமான முன்னாள் முதல்வர் வி.எஸ்.அச்சுதானந்தன் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து தங்களது கோரிக்கைகளை வலியுறுத்திக் கோசங்களை எழுப்பினர்.
இதுகுறித்து போக்குவரத்து ஊழியர்கள் கூறும்போது: ஓய்வூதியர்களுக்கு வழங்க வேண்டிய பணபலன்கள் சுமார் 23 மாதங்களாக வழங்காததால், ஓய்வூதியர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதே போலப் பணியில் உள்ள தற்காலிக ஊழியர்களுக்கு வரவேண்டிய அரியர்ஸ் தொகையை வழங்க வேண்டும்.
தேர்தல் அறிக்கையில் கூறிய போலப் பழை ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தாமல் உள்ளதால், புதிய பென்சன் திட்டமே அமலாகும் சூழல் ஏற்பட்டுள்ளது, அதனை கைவிட வேண்டும்.
100 நாட்களில் போக்குவரத்து ஊழியர்களின் பிரச்சனைகளை தீ்ர்ப்போம் என முதல்வர் அறிவித்தார். ஆனால் 1500 நாட்கள் ஆகிவிட்டது. ஆட்சியும் முடியும் தருவாயில் உள்ளது ஆனால் நடவடிக்கைகள் ஏதும் இல்லை.
இக்கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டங்களை நடத்தியும் நடவடிக்கை இல்லை எனவே வரும் ஆகஸ்ட் 18 ஆம் தேதி முதல் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். டெல்லி விவசாயிகள் போராட்டம் போல தீர்வு எட்டும் வரை போரட உள்ளோம் என கூறினர்.