ரூ. 47 லட்சம் ஆன்லைன் மோசடி குற்றவாளிக்கு சிறை!
ஆன்லைன் வர்த்தக முதலீடு” எனக் கூறி கோவையைச் சேர்ந்த நபரிடம் ரூ.47 லட்சம் மோசடி செய்த வழக்கில், ராஜஸ்தான் இளைஞருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.2 லட்சம் அபராதம் விதித்து கோவை நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
கோவை செல்வபுரத்தை சேர்ந்தவர் மதன்குமார் (42), இவரைக் கடந்த மார்ச் மாதம் whatsapp மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர், ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் ஈட்டலாமெனக் கூறி whatsapp குழு ஒன்றில் இணைத்துள்ளார்.
பின்னர் தொடர்ந்து அவரிடம் பேசி நம்பிக்கையூட்டிய நிலையில், அவர் ஆன்லைன் மூலம் ரூ.47 லட்சம்வரை முதலீடு செய்துள்ளார். ஆனால் அந்த நபர் கூறியது போல, லாபம் வராமலும், முதலீடு செய்த பணத்தையும் எடுக்க முடியாததால் மதன்குமார் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
புகார் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார் மேற்கொண்ட விசாரணை அடிப்படையில், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சுரேந்திர தேவால் (24), என்பவரைப் பிடித்துக் கைது செய்தனர். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு விசாரணை கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள நான்காவது குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
ஒரே மாதத்தில் விசாரணை நிறைவடைந்து குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட சுரேந்திர தேவால் குற்றவாளி என்றும், அவருக்கு மூன்று பிரிவுகளுக்குத் தலா இரண்டு ஆண்டுகள் சிறை மற்றும் 2 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி அருண்குமார் உத்தரவிட்டார்.