பரோட்டா கடை ஊழியர் அடித்துக் கொலை..!
கோவை உக்கடம் புல்லுக்காடு அருகே மது போதையில் ஏற்பட்ட தகராறில், பரோட்டா கடை ஊழியரைத் தாக்கிக் கொலை செய்த சக ஊழியரைப் போலீசார் தேடி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தை சேர்ந்தவர் நவீன் (40). இவர் கோவை உக்கடம் புல்லுக்காடு பகுதியில் அறை எடுத்துத் தங்கி, பரோட்டா கடையில் வேலை செய்து வந்தார். இவரது அறையில் தயாநிதி என்பவரும் தங்கி இருந்துள்ளார்.
இந்த நிலையில் இன்று காலை நீண்ட நேரம் ஆகியும் அறையிலிருந்து யாரும் வராத நிலையில், கடை உரிமையாளர் வந்து பார்த்தபோது நவீன் முகத்தில் ரத்தம் வழிந்தவாறு, சடலமாகக் கிடந்துள்ளார்.
இதையடுத்து அவர் உக்கடம் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த உக்கடம் போலீசார் நவீன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முதல் கட்ட விசாரணையில் அறையில் இருந்த நவீன் மற்றும் தயாநிதி இருவரும் இரவு மது அருந்தியதாகவும், அப்போது ஏற்பட்ட தகராறில் தயாநிதி சமையல் ஸ்டவ் பர்னரால் நவீனை தாக்கிக் கொலை செய்துவிட்டு, தப்பி சென்றதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் தலைமறைவான தயாநிதியை தேடி வருகின்றனர். முன்னதாக அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து அவர் எங்குச் சென்றார் என்பது குறித்தும் விசாரணையைத் தீவிர படுத்தியுள்ளனர்.
மேலும் தயாநிதியை கைது செய்த பின்னரே கொலைக்கான காரணம்குறித்து தெரியவரும் எனப் போலீசார் தெரிவித்துள்ளனர்.