வரதட்சணை கொடுமை – தலைமை காவலர் கைது
தேனி மாவட்டத்தில் வரதட்சணை கேட்டு மனைவியைத் தாக்கிய தலைமை காவலரைப் போலீசார் கைது செய்த நிலையில், தலைமறைவான குடும்பத்தாரை தேடி வருகின்றனர்.
தேனி மாவட்டம் பெரியகுளத்தை சேர்ந்தவர் சிவா இவரது மகள் தங்க பிரியா (32), இவருக்கும், மதுரை காதக்கிணறு பகுதியைச் சேர்ந்த போலீஸ் காவல் ஆய்வாளர் செந்தில்குமரன் மகன் பூபாலன் ஆகிய இருவருக்கும் கடந்த 2018 ஆம் ஆண்டுத் திருமணம் நடந்துள்ளது.இத்தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
பூபாலன் அப்பன்திருப்பதி காவல் நிலையத்தில் தலைமை காவலராகவும், தங்க பிரியா தனியார் பள்ளியில் ஆசிரியையாகவும் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் இவர்களது மகன்களுக்குக் காதணி விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்காகத் தங்க பிரியாவின் வீட்டிலிருந்து தலா 5 பவுன் நகைகள் கொடுக்க வேண்டும் எனப் பூபாலன் மற்றும் அவரது குடும்பத்தார் வலியுறுத்தியதாகத் தெரிகிறது. இதனால் பூபாலன் மற்றும் தங்க பிரியா இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பூபாலன் தங்க பிரியாவை கடுமையாகத் தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த தங்க பிரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் தங்க பிரியா தனது சகோதரியுடன் செல்போனில் பேசிய ஆடியோ இணையத்தில் வைரலானது. இதையடுத்து தங்க பிரியாவின் பெற்றோர் அப்பன்திருப்பதி காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தனர்.
இந்தப் புகார் அடிப்படையில் தலைமை காவலர் பூபாலன் மற்றும் அவரது தந்தையான சாத்தூர் காவல் ஆய்வாளர் செந்தில்குமரன், தாய் விஜயா, சகோதரி அனிதா ஆகியோர் மீது 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
மேலும் இவர்கள் நான்கு பேரும் தலைமறைவான நிலையில், ஊமச்சிகுளம் டி.எஸ்.பி பாலசுந்தரம் தலைமையில் தனிப்படை அமைத்து அவர்களைத் தேடி வருகின்றனர். இதனிடையே மதுரை டி.ஐ.ஜி அபிநவ் குமார், தலைமை காவலர் பூபாலனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் தலைமறைவான தலைமை காவலர் பூபாலனை தனிப்படை போலீசார் திருப்பூர் அருகே கைது செய்துள்ளனர். இதையடுத்து அவரை மதுரைக்கு தனிப்படை போலீசார் அழைத்துச் சென்றுள்ளனர்.
இதனிடையே தன் மீது எந்தத் தவறும் இல்லை அதற்கான ஆதாரங்கள் நிறைய உள்ளது எனப் பூபாலன் அழைத்துச் செல்லும்போது போலீசாருடன் தெரிவித்துள்ளதாகத் தெரிகிறது.