பெரியார் நூலகக் கட்டுமான பணியை பொதுப்பணித்துறை அமைச்சர் நேரில் ஆய்வு!
கோவை பெரியார் நூலகம் கட்டும் பணியை அமைச்சர் எ.வ. வேலு இன்று ஆய்வு செய்தார்.
கோவை காந்திபுரம் மத்திய சிறைச்சாலை மைதானத்தில் தமிழக அரசு சார்பில் பெரியார் நூலகம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதைப் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு இன்று நேரில் ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோவை மாவட்ட மக்கள் குறிப்பாக மாநகர பகுதி மக்கள், இளைஞர்கள், கல்லூரி மாணவ மாணவிகள் அதிகம் பயன்பெறும் வகையில் பெரியார் நூலகம் கட்டப்பட்டு வருகிறது. தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இதற்கு 300 கோடி ரூபாய் ஒதுக்கீடு பணிகளைத் தொடங்கி வைத்தார்.
தற்போது கட்டும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. ஜனவரி மாதத்திற்குள் கட்டுமான பணி முடிந்து 20-ஆம் தேதி திறக்க அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது 5 தலங்கள் கட்டப்பட்டுள்ளது. தொடர்ந்து 6 மற்றும் 7 தளம் கட்டப்பட உள்ளது.
இந்தக் கட்டுமான பணி தரமாக நடைபெறுகிறதா என்பதை தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு செய்து வருகிறார்கள்.
நான் இதுவரை 5 முறை ஆய்வு செய்து உள்ளேன். இதில் மாற்றுத்திறனாளிகள் எளிதில் பயன்படுத்தும் வகையில் ஏறுதளம் மற்றும் லிப்ட் போன்ற வசதிகள் ஏற்படுத்தப்படுகிறது.
30 கோடி மதிப்பில் நூலகத்தில் புத்தகங்கள் இடம் பெறுகின்றன. பெரியார் பெயரில் கட்டப்பட்டு வரும் இந்த நூலகத்தின் கட்டுமான பணியில் நுழைவுப் பகுதியில் திருஷ்டி பொம்மை வைக்கப்பட்டது குறித்து எனக்கு இதுவரை தகவல் வரவில்லை. நானும் பெரியார் கொள்கையில் உடையவன் தான்.
கோவை அவிநாசி மேம்பாலம், பகுதியில் பாதசாரிகள் நடந்து செல்லும் வகையில் சுரங்கப்பாதை குறித்து பால பணிகள் முடிந்ததும் ஆலோசிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.