சத்தீஸ்கர்: 6 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை!
சத்தீஸ்கர் மாநிலத்தில் அடர் வனப்பகுதியில் பதுங்கியிருந்த ஆறு மாவோயிஸ்டுகளைப் போலீசார் சுட்டுக் கொன்றனர்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகளைக் கண்டறியும் நடவடிக்கைகளை அம்மாநில போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அடிக்கடி மத்திய பாதுகாப்பு படை அதிகாரிகளுடன் இணைந்து அவ்வப்போது சத்தீஸ்கர் மாநில போலீசார் வனப்பகுதிகளில் ரோந்து பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் சத்தீஸ்கர் – மகாராஷ்டிரா எல்லை, நாராயணபூர் மாவட்டத்தில் உள்ள அபுஜ்மார்க், அடர் வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் பதுங்கி இருப்பதாகப் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து சத்தீஸ்கர் மாநில போலீசார் மற்றும் மத்திய பாதுகாப்பு படையினர் இணைந்து அடர் வனப்பகுதிக்குள் தேடுதல் வேடையில் ஈடுபட்டனர். அப்போது அங்குப் பதுங்கி இருந்த மாவோயிஸ்டுகள் போலீசாரை நோக்கித் துப்பாக்கியால் சுட துவங்கினர்.
இதனால் இரு தரப்பினர் இடையே துப்பாக்கி சண்டை நீடித்தது. இதில் முகாமில் பதுங்கி இருந்த 6 மாவோயிஸ்டுகள் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
மேலும் அவர்கள் உடல்கள் கைப்பற்றப்பட்ட இடத்தில் ஏகே – 47 மற்றும் எஸ்.எல்.ஆர் ரக துப்பாக்கிகள், வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அதே வனப்பகுதியில் வேறு யாராவது பதுங்கி இருக்கிறார்களா என்பது குறித்து போலீசார் தீவிரமாகச் சோதனை இட்டு வருகின்றனர்.