16 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை: 3 பேருக்குச் சாகும் வரை ஆயுள்
கோவையில் 16 வயதுக்கு சிறுமிக்குப் பாலியல் தொல்லையளித்த வழக்கில் மூன்று பேருக்குச் சாகும் வரை ஆயுள் மற்றும் நான்கு பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 2019 ஆம் ஆண்டுக் கோவை சீரநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள பூங்காவில் 16 வயது சிறுமி ஒருவர் தன் ஆண் நண்பருடன் பிறந்தநாள் கொண்டாட சென்றார்.
அப்போது அங்கு வந்த ஏழு இளைஞர்கள் ஆண் நம்பரை தாக்கி விட்டுச் சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மேலும் அதனை விடியோ எடுத்துத் தகராறில் ஈடுபட்டுள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதையடுத்து பெற்றோர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகார் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார், சிறுமிக்குப் பாலியல் தொல்லையளித்த மணிகண்டன் (30), கார்த்திக் (25), ஆட்டோ மணிகண்டன் (30), ராகுல் (21), பிரகாஷ் (22), நாராயணமூர்த்தி (30), கார்த்திகேயன் (28), ஆகிய ஏழு பேரைக் கைது செய்தனர்.
பின்னர் அவர்கள் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர். இந்த வழக்கு விசாரணை கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, விசாரணை நிறைவடைந்த நிலையில் இன்று அவ்வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டது.
அதில் 7 பேரும் குற்றவாளிகள் என்றும், அதில் முக்கிய குற்றவாளிகளான மணிகண்டன், கார்த்திக், ஆட்டோ மணிகண்டன் ஆகிய மூவருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை மற்றும் ரூ,62 ஆயிரம், ரூ.71 ஆயிரம், ரூ.58 ஆயிரத் அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும் பிரகாஷ், ராகுல், நாராயணமூர்த்தி, கார்த்திகேயன் ஆகிய நான்கு பேருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.50,000 அபராதமும், இதர சட்டப்பிரிவுகளில் இரண்டு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை மற்றும் ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி பகவதியம்மாள் உத்தரவிட்டார்.
இதையடுத்து தண்டனை பெற்ற ஏழு பேரையும் போலீசார் பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றத்திலிருந்து கோவை மத்திய சிறைக்கு அழைத்துச் சென்றனர். இதனிடையே நீதிமன்ற வளாகத்தில் கூடிய குற்றவாளிகளின் உறவினர்கள் கூச்சலிட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.