தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்!
தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி, கோவை ஆட்சியர் அலுவலர் அருகே தமிழ்நாடு அரசு தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் இரண்டாவது நாளாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவையில் 90 சதவீத ஆசிரியர்கள் இன்று விடுப்பு எடுத்து எதிர்ப்பு. அரசு ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கும் தன்பங்கேற்பு ஓய்வூதியத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத்தை நடைமுறைபடுத்த வேண்டும்,
ஊதிய முரனை நீக்கி, ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும், உயர் கல்விக்கான ஊக்கத் தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தித் தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு ( டிட்டோ ஜேக் ) அமைப்பினர் பணியைப் புறக்கணித்துப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இரண்டாவது நாளாகக் கோவை ஆட்சியர் அலுவலகம் அருகே கூடிய ஆசிரியர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கோரிக்கைகளுக்கு அரசாணை வழங்க வேண்டும் என வலியுறுத்திக் கோசங்களை எழுப்பினர்.
அப்போது அங்கிருந்த போலீசார் ஆசிரியர்களைச் சமாதானப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.
இதுகுறித்து பேசிய தொடக்கக் கல்வி ஆசிரியர் கூட்டமைப்பு மாநில தலைவர் அரசு: அரசு ஏற்றுக்கொண்ட கோரிக்கைகள்மீது உடனடியாக அரசாணை வழங்க வேண்டும்.
கோவை மாவட்டத்தில் 90 சதவீத ஆசிரியர்கள் இன்று விடுப்பு எடுத்து இரண்டாவது நாளாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். இருப்பினும் மாணவர்கள் பாதிப்பு ஏற்படாத வண்ணம் மாற்று ஏற்பாடு செய்துள்ளோம்.
உடனடியாக அரசு தலையிட்டுக் கோரிக்கைகள்மீதான அரசாணை வெளியிட வேண்டும். இல்லையென்றால் அடுத்தகட்டமாக வரும் ஆகஸ்ட் மாதம் கோட்டையை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் எனத் தெரிவித்தார்.