வெள்ளலூர் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு சிபிஎம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்..!
கோவை வெள்ளலூர் பேரூராட்சியில் குடிநீர் மற்றும் எரிவாயு திட்டத்திற்காகத் தோண்டி சரியாக மூடாத குழிகளால் விபத்துகள் ஏற்படுவதை கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சியினர் பொதுமக்களுடன் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை வெள்ளலூர் பேரூராட்சியில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணிகள் நடைபெற்று வந்தது. மேலும் சமையல் எரிவாயு குழாய் பதிக்கும் பணிகளும் நடைபெற்று வந்தது.
இந்நிலையில் பணிகள் நிறைவடைந்து நீண்ட நாட்கள் ஆகியும் குழிகளைச் சரியாக மூடாததால் அனைத்து சாலைகளிலும் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது.
இதனைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விவசாய சங்கத் தலைவர் வி.பி.இளங்கோவன் தலைமையில் மதுக்கரை ஒன்றிய குழு நிர்வாகிகள் ரங்கநாதன், குருநாதன், பஞ்சலிங்கம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் பேரூராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
மேலும் மனு அளிக்கலாமென முடிவு செய்யப்பட்ட நிலையில், செயல் அலுவலர் மற்றும் பேரூராட்சி தலைவர், உறுப்பினர்கள் யாரும் இல்லாததால் அலுவலகத்திலேயே காத்திருந்தனர். மேலும் பேரூராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து கண்டன கோசங்களை எழுப்பினர்.