தமிழகத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்
சென்னை, வேலூர், கோவை, நீலகிரி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
இது தொடர்பாகச் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் நிலவும் வேக மாறுபாடு காரணமாகத் தமிழகத்தில் வியாழக்கிழமை (ஜூலை 17) முதல் வரும் 22-ம் தேதிவரை சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.ஓரிரு இடங்களில் மணிக்கு 40-50 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும்.
வியாழக்கிழமை கோவை மாவட்ட மலைப் பகுதிகள், நீலகிரி, தேனி, தென்காசி, வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
வெள்ளிக்கிழமை கோவை மாவட்ட மலைப் பகுதிகள், நீலகிரி, வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
வரும் 19, 20-ம் தேதிகளில் நீலகிரி, கோவை மாவட்ட மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிகக் கனமழையும், திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வியாழக்கிழமை வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
வெப்பநிலை 80 டிகிரி முதல் 96 டிகிரி ஃபாரன்ஹீட் வரை இருக்கக்கூடும் எனச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.