நகைப் பட்டறை ஊழியரிடம் ரூ.30 லட்சம் கொள்ளை – 3 பேர் கைது!
கோவை எட்டிமடை அருகே நகை பட்டறை ஊழியரைத் தாக்கி ரூ.30 லட்சம் கொள்ளை அடித்த வழக்கில் கேரளாவை சேர்ந்த மூன்று பேரைத் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
கேரள மாநிலம் திருச்சூர், வடக்கஞ்செறியை சேர்ந்தவர் குட்டப்பன் மகன் ஜெயன் (50). இவர் திருச்சூரை சேர்ந்த சுரேஷ் என்பவர் நடத்தி வரும் நகை பட்டறையில் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் இவர் தனக்கு நன்கு பழக்கமான கோவை நகை வியாபாரி தானா சோ ஜாதவ் என்பவருக்கு, கேரளாவில் ஏலம் விடப்படும் நகைகளை வாங்கிக் கொடுப்பதற்காகக் கடந்த சனிக்கிழமை ரூ.30 லட்சத்தை வாங்கிக்கொண்டு, தனது இரு சக்கர வாகனத்தில் கேரளா நோக்கிச் சென்றார்.
அப்போது கோவை எட்டிமடை அருகே வந்தபோது திடீரென, பின்னால் வந்த கார் ஒன்று, ஜெயன் வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. பின்னர் அதிலிருந்து வந்த மர்ம நபர்கள் ஜெயன் வைத்திருந்த ரூ.30 லட்சத்தைக் கொள்ளையடித்து விட்டு, அவரையும் சிறிது தூரம் காரில் அழைத்துச் சென்று, இறக்கி விட்டுச் சென்றனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக ஜெயன் கே.ஜி சாவடி போலீசில் புகார் அளித்தார். புகார் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார் மூன்று தனிப்படைகள் அமைத்து மர்ம நபர்களைத் தேடி வந்தனர்.
இந்நிலையில் சிசிடிவி மற்றும் செல்போன் சிக்னல்களை வைத்து, கேரளாவில் பதுங்கி இருந்த கேரளா மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்த சேர்ந்த குட்டப்பன் மகன் மணிஷ் (31), வித்யாதரன் மகன் விஷ்ணு (32), டேவிட் மகன் ஜோசப் (26), ஆகிய மூன்று பேரை மடக்கி பிடித்தனர். மேலும் அவர்கள் கொள்ளையடிக்க பயன்படுத்திய கார் மற்றும் ரூ.6 லட்சத்தைப் போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து கைது செய்யப்பட்ட மூன்று பேரையும், கோவை அழைத்து வந்த போலீசார் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து மூவரையும் மதுக்கரை தாலுகா நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய போலீசார், அவர்களைக் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
இதனிடையே இக்கொள்ளைச் சம்பவத்திற்கு, மூளையாகச் செயல்பட்ட நபர் உள்ளிட்ட சிலரை தனிப்படை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.