சித்திரைச் சாவடி தடுப்பணை நீரில் மூழ்கி இளைஞர் பலி..!
கோவை சித்திரைச் சாவடி தடுப்பணை நீரில் நண்பர்களுடன் குளிக்கச் சென்ற மாநகராட்சி தற்காலிக ஊழியர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியைச் சேர்ந்தவர் தண்டபாணி மகன் கார்த்திக் (28). இவர் கோவை மாநகராட்சியில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றி வந்தார். இந்நிலையில் கார்த்திக் தனது நண்பர்களான தினேஷ், வசந்த், மாதேஷ், ஆகியோருடன் கோவை சித்திரைச் சாவடி தடுப்பணையில் குளிக்கச் சென்றனர்.
ஏற்கனவே தடுப்பணையில் நீரின் அளவு அதிகமாக இருந்ததால், அணையில் குளிக்கவோ, மீன் பிடிக்கவோ கூடாது என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கார்த்திக் தனது நண்பர்களுடன் அணையில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது கார்த்திக் மட்டும் ஆழமான பகுதிக்குச் சென்றார். அப்போது எதிர்பாராத விதமாகக் கார்த்திக் நீரில் மூழ்கினார். அவரைச் சக நண்பர்கள் காப்பாற்ற முயன்றனர். ஆனால் அதற்குள் கார்த்திக் முழுமையாக நீரில் மூழ்கினார்.
இதையடுத்து அவரது நண்பர்கள் ஆலாந்துறை போலீஸ் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த தொண்டாமுத்தூர் தீயணைப்புத் துறையினர், நீரில் இறங்கி கார்த்தியின் உடலைத் தேடும் பணியில் ஈடுபட்டனர்.
நீண்ட நேரம் போராடி கார்த்திக் உடலைத் தீயணைப்பு மீட்டு பிரேத பரிசோதனைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக ஆலாந்துறை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.