கேரளா நிபா வைரஸ் : கோவை – கேரளா எல்லை சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பு தீவிரம்..!
கேரளா மாநிலம் பாலக்காட்டில் நிபா வைரஸ் பாதிப்பில் ஒருவர் உயிரிழந்த நிலையில் கேரளா – கோவை எல்லையில் உள்ள 6 சோதனைச் சாவடிகளில் சுகாதாரத்துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தினர்.
கேரளா மாநிலம், பாலக்காடு மாவட்டம் மன்னார்காடு அருகே தனியார் மருத்துவமனையில் காய்ச்சல் காரணமாக அனுமதிப்பட்ட 58 வயது நபர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் அவரைப் பரிசோதனை செய்தபோது அவருக்கு நிபா வைரஸ் பாதிப்பு இருந்தது தெரியவந்தது.
அவருடன் தொடர்பில் இருந்த நபர்களைக் கண்டறியும் பணியில் கேரளா சுகாதாரத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். மேலும் கோழிக்கோடு, திருச்சூர், கன்னூர், வயநாடு மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் கோவை – கேரளா எல்லையான வாளையாறு, கோபாலபுரம், வீரப்பகவுண்டனூர், ஆனைக்கட்டி, பட்டிசாலை, மீனாட்சிபுரம் ஆகிய 6 சோதனைச் சாவடிகளில், மாவட்ட சுகாதாரத்துறை சார்பில், சுகாதார ஆய்வாளர் தலைமையில் 3 பேர் கொண்ட குழுவினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாகக் கேரளாவிலிருந்து கோவை வரும் வாகனங்களை நிறுத்தி அதில் வரும் பொதுமக்களைத் தெர்மல் ஸ்கேன் கருவிமூலம் காய்ச்சல் பரிசோதனை செய்யப்படுகிறது. அதே போல உடல் வலி, சோர்வு, போன்ற அறிகுறிகள் இருந்தாலும் அவர்களை விபரங்களைச் சுகாதாரத்துறை அதிகாரிகள் சேகரிப்பதோடு, அருகே உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்க ஏற்பாடு செய்துள்ளனர்.
மேலும் பொதுமக்களும் கைகளைத் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும், பழங்களைச் சாப்பிடும் முன் அதனை நன்கு கழுவ வேண்டும் எனச் சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.