Top Storiesஅரசியல்தமிழ்நாடு

அதிமுக – பாஜக கூட்டணி ஆட்சி என்றால், அது கேடு விளைவிக்கும் ஒன்றாகத் தான் இருக்கும் – சண்முகம் (சிபிஎம்)

அதிமுக தனித்து ஆட்சி அமைத்தாலே எப்படி இருக்கும் எனத் தெரியவில்லை, இதில் பாஜகவுடன் கூட்டணி ஆட்சி என்றால் மிகப்பெரிய கேடு விளைவிக்கும் ஒன்றாகத் தான் இருக்கும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார். 

கோவை மருதமலை ்பகுதியில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வழக்கறிஞர் பிரிவினருக்கான அரசியல் பயிற்சி கருத்தரங்கில் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் கலந்து கொண்டு துவக்கி வைத்தார்.

இதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்: 

பாஜக – அதிமுக கூட்டணி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே, தொடர் குழப்பத்தில் இருக்கிறது என்பதற்கு மீண்டும் அமித்ஷா உறுதிபடுத்தி பேசி இருப்பதே எடுத்துகாட்டாகும். ஏற்கனவே இந்தியா – பாக்கிஸ்தான் போரை நான் தான் நிறுத்தினேன் என அமெரிக்க அதிபர் டிரம்ப் 15 முறைக்கு மேல் கூறிவிட்டார்.

அதே போலத் தான் அமித்ஷா கூட்டணி ஆட்சியெனக் கூறி வருகிறார். ஆனால் எடப்பாடி அவர்கள் தனிப்பெரும்பான்மையுடன், தனித்து ஆட்சி அமைப்போம் எனக் கூறி வருகிறார். கூட்டணியில் இருக்கும் குழப்பத்தைத் தெளிவு படுத்த வேண்டியவர் எடப்பாடி பழனிச்சாமி தான்.

தனித்து ஆட்சி அமைத்தாலே எப்படி இருக்கும் எனத் தெரியவில்லை, இதில் பாஜகவுடன் கூட்டணி ஆட்சி என்றால் மிகப்பெரிய கேடு விளைவிக்கும் ஒன்றாக இருக்கும்.

மகாராஷ்டிரா, பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் பாஜக கூட்டணி ஆட்சி எப்படி கபளிகரம் செய்தது என்பது அனைவருக்கும் தெரியும். கூட்டணி ஆட்சி என்றாலும் பாஜகவின் ஏதேர்ச்சியதிகார ஆட்சியைத் தான் நடத்தி வருகிறார்கள். இதே தான் அதிமுக – பாஜக கூட்டணி ஆட்சி அமைத்தால் தமிழகத்திலும் நடைபெறும்.

ஆகவே பாஜகவை தமிழகத்தில் கால் ஊன்ற விடக் கூடாது என்பதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுதியாக உள்ளது எனக் கூறினார்.

*இந்து அறநிலையத்துறை நிதியில் கல்லூரி கூடாது எடப்பாடி கருத்துக்கு*

பாஜகவுடன் கூட்டணி வைத்தவுடன் எடப்பாடி பழனிச்சாமி பாஜக ஆளாகவே மாறிவிட்டார் என்பது தான் பிரச்சனை. பாஜக முன்வைக்கும் இந்து அறநிலையத்துறையை ஒப்படைக்க வேண்டும், அதில் வரும் நிதிகளைக் கோவில்களுக்கு மட்டும் செலவு செய்ய வேண்டும், சொத்துகளை இந்துகளிடம் ஒப்படைக்க வேண்டும்.

அரசிடமிருந்து கோயில்களை விடுவிக்க வேண்டும் என்ற கொள்கையைப் பாஜக, ஆர்.எஸ்.எஸ் கும்பல் தமிழகத்தில் வலியுறுத்தி வருகிறது.

இதுவரை பாஜக, ஆர்.எஸ்.எஸ் மட்டுமே பேசி வந்த நிலையில், சேராத இடம் சேர்ந்துள்ள எடப்பாடி பழனிச்சாமியும் பாஜக, ஆர்.எஸ்.எஸ் குரலை எதிரொலித்துள்ளார்.

அதன் விளைவு தான் இந்து அறநிலையத்துறை சார்பாகக் கல்லூரி கட்ட கூடாது எனத் தெரிவித்துள்ளனர். இது சட்டப்படியான நடவடிக்கை தான் காமராஜர் காலத்தில் இருந்தே அப்பணிகள் நடந்துள்ளது. 

இது 60 ஆண்டுகளாக நடந்து வரும் விஷயம், இது சட்டப்படியான ஒன்றுதான், தமிழக முதல்வராக இருந்த எடப்பாடிக்கு இந்த அடிப்படை விஷயம் கூடத் தெரியவில்லை. இது தெரியாமல் தான் இருந்துள்ளாரா? எடப்பாடி பழனிச்சாமியின் இந்தக் கருத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுக் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

*தமிழகத்திற்கு ஒன்றிய அரசு நிதி வழங்கவில்லையெனத் திமுக அரசியல் செய்கிறது என்ற  எடப்பாடி கூறிய கருத்துக்கு*

தமிழகத்திற்கு நல்லது செய்யாமல் இருந்தால் பரவாயில்லை, ஆனால் கெட்டதை செய்யாமல் இருக்க வேண்டும். 

ஒன்றிய அரசு கல்விக்கு தரவேண்டிய நிதியைத் தமிழகத்திற்கு தராமல் துரோகத்தைச் செய்து வருகிறார்கள்.  தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வி அமைப்பில் மண்ணை அள்ளி எரிந்து வருகிறார்கள்.

இப்படிப்பட்ட சூழலில் தமிழ்நாட்டில் முக்கிய எதிர்க்கட்சி தலைவரான இவர் தமிழ்நாட்டின் நலன்,  நிதி, மாநில அதிகாரம் உள்ளிட்ட விஷயங்களைக் கட்சி வித்தியாசம் இல்லாமல்,  தமிழ்நாட்டின் நலனை முன்னேற்றித் தான் பேச வேண்டுமே தவிர,  கூட்டணி சேர்ந்து இருக்கிறோம் என்பதற்காக ஒன்றிய பாஜக அரசை ஆதரித்துக் குரல் எழுப்ப வேண்டிய அவசியம் இல்லை.

ஒருவேளை நாளைக்கு இவர் ஆட்சிக்கு வந்தால் ஒன்றிய அரசாங்கம் இதே நிலைப்பாட்டை எடுத்தால் என்ன செய்வார். 

தமிழ்நாட்டின் நலனைப் பற்றிக் கவலைப்படாமல் தாங்கள் சேர்ந்துள்ள கூட்டணியின் நலனைப் பற்றி மனதில் வைத்துச் செயல்பட்டு வருகிறார். இது தமிழ்நாட்டு நலனுக்கு விரோதமானது எனத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!