குற்றச் சம்பங்களை குறைக்க “ஸ்மார்ட் காக்கிஸ்” என்ற புதிய திட்டம் துவக்கம்..!
குற்றச் சம்பங்களை குறைக்க “ஸ்மார்ட் காக்கிஸ்” என்ற புதிய திட்டத்தைக் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் துவக்கி வைத்தார்.
கோவை மாவட்ட காவல் துறை சார்பில் “SMART KHAKKI’S” என்ற புதிய திட்டத்தை, கோவை ஆயுதப்படை வளாகத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் துவங்கி வைத்தார்.
குற்றவியல் தடுப்பு, போக்குவரத்து ஒழுங்குமுறை மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், 33 புதிய ரோந்து வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளது. பல்சர் வாகனத்தில் காவலர்கள் ரோந்து செய்வதற்கான GPS கருவி, சைரன் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது.
மேலும் இரண்டு சக்கர வாகனத்தில் இரண்டு காவலர்கள் பயணிப்பதற்கு அதில் ஒருவரிடம் வாக்கி டாக்கி மற்றும் கண்காணிப்பு கேமரா வசதியுடன் ரோந்து பணி மேற்கொள்வதற்கான வசதிகளை மேற்கொண்டுள்ளனர்.
33 வாகனங்களை மாவட்டத்தில் உள்ள புறநகர் காவல் நிலையங்களுக்குத் தலா ஒரு வாகனம் வீதம் ஒதுக்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சி, சூலூர், அன்னூர் உள்ளிட்ட காவல் நிலையங்களுக்கு மட்டும் இரண்டு வாகனங்கள் வீதம் ஒதுக்கப்பட்டிருக்கிறது.
குற்ற சம்பவங்களைத் தடுப்பதற்கும் பொதுமக்கள் மத்தியில் காவல்துறையின் கண்காணிப்பை உறுதிப்படுத்துவதற்கும் இந்த ஸ்மார்ட் காக்கி திட்டம் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் குற்றச்சாட்டுகளைத் தடுப்பதற்கு பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் இவர்கள் ரோந்து பணியை மேற்கொள்வார்கள் என மாவட்ட போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.