மருத்துவ மாணவி உயிரிழந்த விவகாரம்: தாழ்த்தப்பட்ட நல ஆணையக் குழுவினர் விசாரணை
கோவை தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் படித்த முதுகலை மாணவி பவபூரணி உயிரிழந்த விவகாரம் தொடர்பாகத் தமிழ்நாடு மாநில தாழ்த்தப்பட்ட நல ஆணையக் குழுவினர் விசாரணை மேற்கொண்டனர்.
நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பவபூரணி. இவர் கோவை பீளமேடு பகுதியில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மயக்கவியல் முதலமாண்டு படித்து வந்தார். மேலும் அவர் மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சை பிரிவில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் மருத்துவமனையில் பணியில் இருந்த பவபூரணி கடந்த ஜூலை.6 ஆம் தேதி உள்ளே தாழியிடப்பட்ட கழிவறையில் சடலமாக மீட்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து பீளமேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இது தொடர்பாக விசாரணை அறிக்கை தாக்கல் செய்யத் தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம் கோவை ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் மருத்துவ மாணவி மரணம் தொடர்பான தமிழ்நாடு தாழ்த்தப்பட்டோர் நல ஆணைக் குழு உறுப்பினர்கள் பொன்தோஷ், செல்வகுமார் ஆகியோர் நேரில் விசாரித்தனர். அப்போது மாணவியின் பெற்றோர்கள், தனியார் மருத்துவமனை நிர்வாகம், சக மாணவிகள், கோவை அரசு மருத்துவமனை டீன், காவல் துறை விசாரணை அதிகாரி ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது மாணவியின் உறவினர்கள் தரப்பில் சில சந்தேகங்கள் எழுப்பப்பட்டது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையக்குழு உறுப்பினர்
செல்வகுமார் பேட்டி : கோவை தனியார் மருத்துவமனையில் முதுகலை மாணவி உயிரிழந்த விவகாரத்தில், தமிழ்நாடு மாநில தாழ்த்தப்பட்டோர் நல ஆணையத்திற்கு வந்த புகார் அடிப்படையில் ஆணைக்குழு சார்பில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இரு தரப்பினர் கூறிய கருத்துக்களை அறிக்கையாக ஆணையக்குழு தலைவரிடம் சமர்பித்து, உரிய தீர்வு காண உள்ளோம். மாணவியின் பெற்றோர்கள் சில கோரிக்கைகளை வைத்துள்ளனர், அதனையும் நீதியரசரிடம் சமர்பிக்க உள்ளோம். மேலும் பெற்றோர்கள் எழுப்பிய சந்தேகம், மருத்துவர்கள் விளக்கம் ஆகியவற்றை மீண்டும் போலீஸ் விசாரணை அதிகாரி பதிவு செய்து கொண்டார். மேலும் கழிவறையில் கைப்பற்றப்பட்ட ஊசி சிரெஞ்சு ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஓரிரு நாட்களில் ஆய்வு அறிக்கை கிடைத்துவிடும் எனத் தெரிவித்தார்.