Top Storiesஅரசியல்

கடனும் வாங்குகிறார்கள், புதிய திட்டம் இல்லை, சந்தேகம் ஏற்படுகிறது – எடப்பாடி பழனிசாமி

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைப்பயிற்சி மேற்கொண்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அங்கு வந்த மக்களைச் சந்தித்து அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்கள்குறித்து பேசிக் கலந்துரையாடினார். 

அதிமுக பொதுச்செயலாளர்  எடப்பாடி பழனிச்சாமி “மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்” என்ற முழக்கத்தோடு  தமிழக முழுவதும் தேர்தல் பரப்புரை பிரச்சார பயணத்தை மேற்கொள்கிறார்.

நேற்று கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் துவங்கி காரமடை, பெரியநாயக்கன்பாளையம், துடியலூர், சரவணம்பட்டி பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். தொடர்ந்து இன்று இரண்டாவது நாள் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.

இந்நிலையில் காலைக் கோவை பந்தய சாலை பகுதியில் எடப்பாடி பழனிச்சாமி நடைப்பயிற்சி  மேற்கொண்டு பொதுமக்களைச் சந்தித்தார். தொடர்ந்து நடைபாதை வியாபாரிகளைச் சந்தித்து வியாபாரம் குறித்து கேட்டறிந்து எலுமிச்சை பழங்களை வாங்கினார். 

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிச்சாமி கூறும்போது : 

அதிமுக ஆட்சி அமைந்த உடன் திமுக வாங்கிய கடன்குறித்து விசாரிக்க விசாரணை கமிஷன் போடப்படும் என்ற கேள்விக்கு, தமிழகத்தில் இவ்வளவு கடன் வாங்க வேண்டிய அவசியம் என்ன? இன்றைக்கு வருவாய் அதிகரித்துள்ளது. 2020-21விட 2024-25-ல் கூடுதல் வருவாய் அதிகரித்து ஒரு லட்சத்து 35 ஆயிரம் கோடி வந்துள்ளது, வருவாயும் அதிகரித்துள்ளது.

கடனும் வாங்குகிறார்கள், புதிய திட்டம் இல்லை, சந்தேகம் ஏற்படுகிறது. அதனால் தான் நேற்றைய தினம் அந்த கருத்தைத் தெரிவித்தேன். 

திமுக தேர்தல் அறிக்கையில் அரசுப் பணியிடங்கள் 4 லட்சம் காலியாக இருக்கிறது அதை நிரப்பப்படும் என இளைஞர்களை ஏமாற்றியுள்ளனர். 50,000 பேருக்குத் தான் வேலை வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

நான்கு ஆண்டுகளில் ஓய்வு பெற்றிருக்கிறவர்களின் எண்ணிக்கை அதிகம். திமுகவின் தேர்தல் அறிக்கை பொய்யாகத் தான் பார்க்கப்படுகிறது. 

அதிமுக ஆட்சிக்காலத்தில் நீண்ட காலமாகத் தூர்வாரப்படாத அணைகள் எல்லாம் தூர்வாரப்பட்டுள்ளது. விவசாயிகள் எந்தக் கட்டணமில்லாமல் இலவசமாக வண்டல் மண் எடுத்துச் செல்லலாம் எனத் தெரிவிக்கப்பட்டு மேட்டூர் அணையிலிருந்து வண்டல் மண் எடுத்துச் சென்றனர்.

அது போலத் தமிழகத்தில் பல்வேறு அணைகளில் வண்டல் மண் தேங்கி இருக்கிறதோ அதை எடுத்துச் செல்ல அனுமதி அளித்தோம்.ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு எந்த அணையும் தூர்வாரப்படவில்லையென தெரிவித்தார்.

இதனை அடுத்து பந்தய சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் தொழில்துறையினரை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்திக்கிறார்.

தொடர்ந்து கோவை அதிமுக கட்சி அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளை சந்திக்கிறார். பின்னர் மாலை தேர்தல் பரப்புரை பிரச்சாரத்தை மேற்கொள்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!