நொய்யல் ஆற்றை தூர்வாரி சீரமைக்க வலியுறுத்தி தொடர் இயக்கம் – பி.ஆர்.பாண்டியன்
கோவை நொய்யல் ஆற்றைத் தூர்வாரி சீரமைக்கும் பணிகளை மேற்கொள்ள வலியுறுத்தித் தொடர் இயக்கம் நடத்த உள்ளதாகத் தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.
கோவை ஆத்துப்பாலம் வழியாகச் செல்லும் நொய்யல் ஆற்றில் கழிவு நீர் கலந்துச் செல்வதால் அப்பகுதி குடியிருப்பு மக்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவதாகத் தெரிவித்தனர்.
இந்நிலையில் ஆத்துப்பாலம் நொய்யல் ஆற்றைத் தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் நேரில் பார்வையிட்டார். தொடர்ந்து அப்பகுதி மக்களிடம் நொய்யலில் கலந்து வரும் கழிவு நீரால் ஏற்படும் பாதிப்புகள்குறித்து கேட்டறிந்தார்.
பின்னர் இதுகுறித்து பி.ஆர்.பாண்டியன் கூறும்போது: தொழில் நகரமான கோவையின் அழகு நொய்யல் ஆறுதான். ஆனால் அந்த நொய்யல் ஆறு கழிவு நீர் கால்வாயாக மாறியுள்ளது. ஒரு காலத்தில் 300 அடி அகலத்திற்கு இருந்த இந்த ஆறு இப்போது வெரும் 50 அடி கால்வாயாக சுருங்கியுள்ளது.
மேலும் கழிவு நீருடன் வரும் நீரால் கோவை மாநகரில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. நொய்யலை ஆற்றை தூர்வாரி சீரமைக்க வேண்டும், குறிப்பாக கோவையில் உள்ள தொழிலதிபர்கள் பங்களிப்போடு இதனை செய்ய வேண்டும்.
விரைந்து செயல்பட்டு நொய்யலில் கலக்கும் கழிவு நீர், சாயப்பட்டறை கழிவுகள் கலப்பை தடுக்க வேண்டும், இதன் மூலம் தான் கோவை மக்களையும், கோவையின் அழகையும் மீட்டெடுக்க முடியும்,. மேலும் இதனை வலியுறுத்தி கோவை மக்களை ஒன்றிணைத்து பல போராட்டங்களை நடத்த உள்ளோம்.
மேலும் நாளை கோவையில் நடைபெறும் தியாகிகள் தின விழாவில் தேசிய அளவிலான விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளனர்.
இக்கூட்டத்தில் விவசாயிகளுக்கான குறைந்தபட்ச ஆதார விலை வழங்க வேண்டும், அமெரிக்கவுடனான வர்த்தக ஒப்பந்தத்தில் வேளாண் உற்பத்தி பொருட்களை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்த உள்ளோம்.
காவிரி, வைகை, தாமிரபரணி, பாலாற்றில் கலக்கும் கழிவுகளை தடுக்க தமிழ்நாடு அரசு போர் கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்த உள்ளோம் என தெரிவித்தார்.