கோவையில் வீட்டின் கதவை உடைத்து மாட்டு தீவனங்களை சாப்பிட்ட காட்டு யானை!
கோவை தொண்டாமுத்தூர் கெம்பனூரில் விவசாயி வீட்டின் கதவை உடைத்து உள்ளே இருந்து மாட்டு தீவனங்களை காட்டு யானை வியாழக்கிழமை உண்டது.
கோவை தொண்டாமுத்தூர், நரிசீபுரம், மருதமலை, ஆலாந்துறை, உள்ளிட்ட பகுதியில் உள்ள விவசாய தோட்டங்கள் மற்றும் குடியிருப்புகளுக்குள் கடந்த சில தினங்களாகத் தொடர்ச்சியாகக் காட்டு யானைகள் உலா வருகிறது. அவ்வாறு வனப்பகுதியிலிருந்து வெளியேறும் காட்டு யானைகள் விவசாய நிலங்களில் பயிரிடும் விளைப்பொருட்கள் சேதப்படுத்தி வருகிறது.
குறிப்பாகச் சமீப காலமாக வீட்டிற்குள் புகுந்து அரிசி, பருப்பு மற்றும் மாட்டு தீவனங்களை யானைகள் உண்டு வருகிறது. இந்த நிலையில் வியாழக்கிழமை இரவு தொண்டாமுத்தூர் அட்டுக்கல் வனப்பகுதியிலிருந்து வெளியேறி ஒற்றை காட்டு யானை ஒன்று அங்குள்ள சுற்று வட்டார பகுதிகளில் உலா வந்தது.
அப்போது ஓணாப்பாளையம் வழியாகக் கெம்பனூர் வந்த காட்டு யானை அங்கிருந்த ராஜப்பன் என்பவரது வீட்டின் கதவை உடைத்து உள்ளே இருந்த புண்ணாக்கு, தவுடு உள்ளிட்ட மாட்டு தீவன மூட்டைகளை இழுத்து தள்ளியது. இதையடுத்து அங்கிருந்த பணியாளர்கள் சத்தம் போட்டு அலறினர். மேலும் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
விரைந்து வந்த வனத்துறையினர் நீண்ட நேரம் போராடி காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர். அடிக்கடி வீட்டின் வளாகத்தில் புகுந்து வெளியே உள்ள தீவனங்களை உண்ணும் காட்டு யானை திடிரென வீட்டின் கதவை உடைத்து உள்ளே செல்ல முயன்றது அப்பகுதி விவசாயிகள் மத்தில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.