கழிவறை ஜன்னல் வழியாக புகுந்து 5 சவரன் நகை திருட்டு!
கோவை பீளமேடு அருகே பூட்டி இருந்த வீட்டின் கழிவறை ஜன்னல் வழியாக புகுந்த மர்ம நபர் உள்ளே இருந்த 5 சவரன் நகைகளை சாவகாசமாக திருடிச் சென்றார்.
கோவை பீளமேடு திருநகர் சிவில் ஏரோடிரோம் பகுதியை சேர்ந்தவர் சுகுமார் (68). தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் சுகுமார் கடந்த ஏப்ரல் 10 ஆம் தேதி தனது வீட்டை பூட்டி விட்டு, ஹைதராபாத்தில் உள்ள தனது நண்பரை பார்க்கச் சென்றார்.
இதனால் நீண்ட நாட்களாக வீடு பூட்டப்பட்டிருந்தது. இந்நிலையில் வியாழக்கிழமை சுகுமார் வீட்டின் காவலாளி வந்து பார்த்த போது வீட்டின் கழிவறை ஜன்னல் கண்ணாடிகள் அகற்றப்பட்டு இருந்ததும், வீட்டின் பின் பக்க கதவு திறந்திருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து அவர் உடனடியாக சுகுமாருக்கு தகவல் அளித்தார். உடனே சுகுமார் தனது உறவினருக்கு செல்போன் மூலம் அழைத்து விவரங்களை கூறியுள்ளார். அவரது உறவினர் வந்து பார்த்த போது வீட்டில் வைத்திருந்த 5 சவரன் தங்க நகைகள் மாயமானது தெரியவந்தது.
இதையடுத்து ஹைதராபாத்தில் இருந்து வந்த சுகுமாரன் பீளமேடு போலீஸில் புகார் அளித்தார். புகார் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதல் கட்ட விசாரணையில் சுகுமாரின் வீட்டு கழிவறையில் இருந்த கண்ணாடி துண்டுகளை அகற்றி விட்டு உள்ளே நுழைந்த மர்ம நபர், வீட்டில் தேடி நகைகளை திருடி விட்டு பின்னர் பின் பக்க கதவை திறந்து சாவகாசமாக தப்பிச் சென்றது தெரியவந்தது. மேலும் தப்பிச் சென்ற மர்ம நபரை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.