கேளரா வியாபாரியிடம் தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கு – மேலும் ஒருவரிடம் விசாரணை
கோவையில் கேரளா வியாபாரியிடம் 1.25 கிலோ தங்க கட்டிகள் கொள்ளையடித்த வழக்கில் மேலும் ஒருவரை தனிப்படை போலீசார் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கேரளா திருச்சூரை சேர்ந்தவர் ஜெய்சன் ஜேக்கப். நகை கடை வியாபாரி. கடந்த ஜூன்.14 கோவையிலிருந்து கேரளாவிற்கு காரில் சென்றபோது வாளையாறு அருகே வந்தபோது லாரியால் மோதி வழிமறித்த மர்ம கும்பல் காரில் இருந்த 1.25 கிலோ தங்க கட்டிகளைக் கொள்ளையடித்துச் சென்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடைபெற்று வந்தனர்.
திருச்சூர், கொச்சின் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் முகாமிட்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் தங்ககட்டிகளை கொள்ளையடித்த வழக்கில் ஆகிய ஆலப்புழாவை சேர்ந்த அன்சத், விஷ்னு ஆகிய இருவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில் கடந்த ஜூன்.14 ஆம் தேதி கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு விட்டு, கோவையில் உள்ள வேறொரு வழக்கில் தண்டனை அறிவிக்கப்பட்டு தலைமறைவான அஜித் என்பவர், ஜூன்.17 ஆம் தேதி நீதிமன்றத்தில் சரணடைந்து சிறைக்கு சென்றார்.
சிறையில் இருந்த கேரளா மாநிலத்தைச் சேர்ந்த அஜித் என்பவரைத் தற்போது தனிப்படை போலீசார் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய நபர்களைத் தனிப்படை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.