சிறுவாணி அணையின் நீர்மட்டத்தை 44.61 அடியாக உயர்த்த திமுக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் – வானதி சீனிவாசன்
கோவை மக்களுக்குக் குடிநீர் வழங்குவதில் திமுக அரசு அலட்சியம் காட்டுவது அதிர்ச்சி அளிக்கிறது தமிழ்நாட்டின் தொழில் நகரான கோவையின் முக்கிய நீராதாரமாகச் சிறுவாணி அணை உள்ளது.
இதைக் கேரள மாநில அரசு பராமரிக்கிறது. அணையின் நீர்த்தேக்க அளவு 49.53 அடி என்றாலும், பாதுகாப்பு காரணங்களுக்காக 44.61 அடிவரை மட்டுமே தண்ணீர் தேக்கப்படுகிறது.
தற்போது, தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், அணையின் நீர்மட்டம் 44.61 அடியை எட்டியிருக்க வேண்டும். ஆனால், நீர்மட்டம் 44 அடியை நெருங்கும் முன்பே, கேரள நீர்வளத்துறையினர் தண்ணீரை வெளியேற்றியுள்ளனர்.
இதனால் அதிக மக்கள்தொகை கொண்ட கோவை மாநகரில், கோடைகாலங்களில், குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சிறுவாணி அணையில் 44.61 அடி நீர் இருப்பதை உறுதி செய்ய வேண்டிய தமிழ்நாடு அரசின் கடமை. ஆனால், அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் திமுக அரசு ஆழ்ந்த உறக்கத்தில் உள்ளது.
சிறுவாணி அணையின் பராமரிப்புக்கு கேரள மாநில அரசு கேட்ட 5 கோடி ரூபாயை, தமிழ்நாடு அரசு இதுவரை வழங்கப்படவில்லை எனக்கூறப்படுகிறது.
தமிழ்நாடு அரசுக்கு அதிக வருவாயை ஈட்டித் தரும், வளர்ந்த மாநிலம், தொழில் மாநிலம் என்ற அந்தஸ்தை தமிழ்நாட்டுக்கு பெற்றுத்தரும் கோவை மாநகரின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் விஷயத்தில்கூட திமுக இந்த அளவுக்கு அலட்சியமாக இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
எனவே, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதில் தலையிட்டு, சிறுவாணி அணையில், இப்போதைக்கு 44.61 அடி வரையாவது நீரை தேக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திமுகவின் கூட்டணி கட்சியான கம்யூனிஸ்ட்கள் ஆளும் கேரள மாநில அரசுடன் பேச்சு நடத்தி, சிறுவாணி அணையில் 50 அடிவரை நீரைத் தேக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் கோவை மக்கள் திமுக அரசை மன்னிக்கமாட்டார்கள்.