திருவில்லிப்புத்தூர் அர்ச்சகர் விவகாரம்; அனைத்து சாதி அர்ச்சகர் திட்டத்தின் மீது அவதூறு – தபெதிக புகார் மனு
அனைத்து சாதி அர்ச்சகர் திட்டத்தின் மீது அவதூறு பரப்பும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர கோவை மாநகர காவல் ஆணையரிடம் மனு அளித்தனர்.
விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோவில் உதவி அர்ச்சகர் கோமதி விநாயகம் (30) மற்றும் கும்பாபிஷேக பணிகளுக்கு வினோத், கணேசன் ஆகியோர் ஆபாசமாக நடனமாடியதோடு, கோவிலுக்கு வந்த பெண் பக்தர்கள்மீது விபுதி வீசி அத்துமீறலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அவர்கள்மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வரும் நிலையில், உதவி அர்ச்சகம் கோமதி விநாயகம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
இந்நிலையில் குடிபோதையில் ஆபாச நடனம் ஆடியவர்கள் தமிழ்நாடு அரசு சார்பில் நடத்தப்படும் அனைத்து சாதி அர்ச்சகர் திட்டத்தின் செயல்படும் பள்ளியில் படித்தவர்கள் எனச் சங் பரிவார் அமைப்புகளின் ஆதரவு நாளிதழ்கள், மற்றும் இந்து அமைப்பினர் இணையதளங்களில் தவறான செய்திகளைப் பரப்பி வருவதாகவும், அவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தித் தபெதிக வினர் கோவை மாநகர காவல் ஆணையரிடம் மனு அளித்தனர்.
இதுகுறித்து தபெதிக பொதுச்செயாளர் கு.ராமகிருஷ்ணன் கூறும்போது: திருவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோவில் உதவி அர்ச்சகர் கோமதி வியாகம் உள்ளிட்ட பேர் குடிபோதையில் ஆபாச நடனம் ஆடிய விடியோ இணையத்தில் வைரலானது. இந்த நிலையில் அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இவர்கள் பார்ப்பனர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அவர்களுக்கான பள்ளியில் படித்தவர்கள். ஆனால் திட்டமிட்டு சங்பரிவார் ஆதரவு நாளிதழ்கள், இணையதளங்கள், அதனை மாற்றித் தமிழ்நாடு அரசு நடத்தும் அனைத்து சாதி அர்ச்சகர் திட்டப் பள்ளிகளில் படித்த மாணவர்கள் என அவதூறான தவலை பரப்பி வருகின்றனர்.
மேலும் இப்பிரச்சனை மடைமாற்றம் செய்ய முயற்சி செய்கின்றனர். இவ்வாறான அவதூறு கருத்துகளைக் கூறி வரும் நபர்கள்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.