ஹைதராபாத் – கொல்லம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு!
தெலங்கானா மாநிலம், ஹைதராபாதில் இருந்து போத்தனூா் வழித்தடத்தில் கேரள மாநிலம், கொல்லத்துக்கு இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் சேவை ஜூலை 28-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது
இது தொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ஹைதராபாத் – கொல்லம் இடையே இயக்கப்பட்டு வரும் வாராந்திர சிறப்பு ரயில் சேவை ஜூன் மாதத்துடன் முடிவடையும் நிலையில் தற்போது ஜூலை 28ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.
அதன்படி, ஹைதராபாதில் இருந்து ஜூலை 05ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை சனிக்கிழமைகளில் இரவு 11.10 மணிக்குப் புறப்படும் ஹைதராபாத் – கொல்லம் வாராந்திரச் சிறப்பு ரயில் (எண்: 07193) திங்கள்கிழமைகளில் காலை 7.10 மணிக்கு கொல்லம் நிலையத்தைச் சென்றடையும்.
மறுமாா்க்கமாக, கொல்லத்தில் இருந்து ஜூலை 07ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை திங்கள்கிழமைகளில் காலை 10.45 மணிக்குப் புறப்படும் கொல்லம் – ஹைதராபாத் வாராந்திர சிறப்பு ரயில் (எண்: 07194) செவ்வாய்க்கிழமைகளில் மாலை 5.30 மணிக்கு ஹைதராபாத் நிலையத்தைச் சென்றடையும்.
இந்த ரயிலானது சாஸ்தன்கோட்டை, கருநாகப்பள்ளி, காயன்குளம், மாவேலிக்கரை, செங்கண்ணூா், திருவல்லா, சங்கணாச்சேரி, கோட்டயம், எா்ணாகுளம் டவுன், ஆலுவா, திருச்சூா், பாலக்காடு, போத்தனூா், திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, சித்தூா், திருப்பதி, ரேணிகுண்டா, கூடூா், நெல்லூா், ஓங்கோல், தெனாலி, குண்டூா், செகந்தராபாத் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.