தமிழக சட்டமன்ற தேர்தலை பொறுத்த வரை திமுக கூட்டணி வெற்றி பெறும், திமுக தனிப்பெரும்பான்மை பெறும் – வைக்கோ
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலைப் பொறுத்த வரை திமுக கூட்டணி வெற்றி பெறும், திமுக தனிப்பெரும்பான்மை பெறும், கூட்டணி அரசுக்கே அங்கு வேலை இருக்காது என மதிமுக பொதுசெயலாளர் வைகோ தெரிவித்தார்.
கோவை விமான நிலையத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது கோவை பத்திரிக்கையாளர்கள் மட்டும்தான், நான் சொன்னதை அப்படியே வெளியிடுகின்றனர் எனத் தெரிவித்தார்.
ஆனால் நான் சொல்லாததை சொன்னதாகச் சில இடங்களில் எழுதுகின்றனர் எனத் தெரிவித்த அவர், மதிமுக நிர்வாகக் குழு கூட்டத்தில் இரட்டை இலக்கம் என்ற வார்த்தையையே சொல்லவில்லை, ஆனால் இரட்டை இலக்கத்தில் தொகுதிகள் கேட்கின்றனர் என எழுதுகின்றேன் எனத் தெரிவித்தார்.
8 தொகுதி ஜெயித்தால் அங்கீகாரம் கிடைக்கும் ஆனால் 12 கூடக் கேட்கலாம் , அதைத் தலைமைதான் முடிவு செய்யும் எனத் துரைவைகோ விளக்கம் கொடுத்த பின்பும், இரட்டை இலக்கத்தில் இடம் கேட்பதாக எழுதி இருக்கின்றனர் எனத் தெரிவித்தார்.
மண்டலவாரியாக 7 பகுதியாகத் தமிழகத்தை பிரித்துச் செயல் வீரர் கூட்டம் நடத்த இருக்கின்றோம், திருப்பூரில் நடைபெறும் முதல் கூட்டத்தில் பங்கேற்க வந்திருக்கிறேன் எனத் தெரிவித்தார்.
சட்டமன்ற தேர்தலைப் பொறுத்த வரை திமுக மகத்தான வெற்றி பெறும், தனிப்பெரும்பான்மை பெறும் எனவும், கூட்டணி அரசுக்கே அங்கு வேலை இருக்காது எனத் தெரிவித்தார்.
கலைஞர் அவர்களின் இறுதி மூச்சு இருக்கும்போது, அவரைச் சந்தித்தபோது, உங்களுக்கு எப்படி 30 ஆண்டுகளாகப் பக்கபலமாக இருந்தேனோ அதுபோலத் தம்பி ஸ்டாலினுக்கு பக்கபலமாக இருப்பேன் எனச் சொன்னேன் எனவும், கலைஞரிடம் மரண படுக்கையில் சொன்ன வாக்குறுதியை உறுதியாகக் காப்பாற்றுவேன் எனவும் தெரிவித்தார்.
திமுக தனிப்பெரும்பான்மை பெறும் எனத் தெரிவித்த அவர், இந்த அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம், அறிக்கை கொடுத்தது கிடையாது, அந்தளவு சிறப்பாக ஆட்சி திராவிட மாடல் ஆட்சியை நடத்திக்கொண்டு இருக்கின்றனர் எனவும் தெரிவித்த அவர், திமுக சிங்கிள் மெஜாரிட்டி, அப்சலூட் மெஜாரிட்டி பெறும் எனவும் தெரிவித்தார்.
பா.ஜ.க அதிமுக கூட்டணியைப் பற்றித்தான் இப்போது அதகதான செய்திகள் , யார் யாருடன் சேர்வார்கள் என வருகின்றது, திமுக கூட்டணியில் எந்தக் குழுப்பமும் இல்லை எனவும் தெரிவித்தார்.
திருப்புவனம் அருகே அஜித்குமார் என்ற இளைஞர்மீது காவல் துறையினர் சித்திரவதை செய்து இருக்கின்றனர். விசாரணையில் எந்தத் தவறும் செய்யவில்லையெனத் தெரிவித்த நிலையிலும், காவல் துறை அடித்து உதைத்து சித்திரவதை செய்து இருக்கின்றனர் எனவும் குற்றம்சாட்டினார்.
அந்தக் காவல் துறையினர் மீது அரசு உடனடியாகப் பணியிடை நீக்கம் நடவடிக்கை எடுத்து இருக்கின்றது எனத் தெரிவித்தார்.
உயர் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் விசாரணை நடைபெற வேண்டும், காவலர்கள்மீது கொலை வழக்குப் பதிவு செய்து நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
சாத்தான்குளம் விவகாரத்தில் அப்போதைய அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை , ஆனால் இந்த விவகாரத்தில் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து இருக்கின்றது எனவும் தெரிவித்தார்.
சந்தேகத்தின் பேரில் பிடிபடுபவர்களை அடித்துக் கொல்வது என்பது இனி இப்போதும் இருக்க கூடாது எனத் தெரிவித்த அவர், காவல் நிலையங்களில் சித்திரவதை மரணங்கள் நிகழக் கூடாது என்பதை உயர் அதிகாரிகள் உருவாக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
அரசு காவல்துறை அதிகாரிகளை அழைத்து இதை எப்படி அணுக வேண்டும் என்ற ஆலோசனையும் வழங்கியிருக்கின்றது எனத் தெரிவித்த அவர் அதனால் தான் உயர்நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் விசாரணையெனக் கோரிக்கை விடுத்திருக்கிறேன் எனவும் தெரிவித்தார்.
மதிமுகவில் இருந்த நிர்வாகிகள் திமுகவிற்கு செல்வது மதிமுக தலைமைக்கு அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கின்றதா என்ற கேள்விக்கு, சிரித்த வைகோ, எங்கள் பின்னால் லட்சக்கணக்கான தொண்டர்கள் கட்சியைப் பாதுகாக்க இருக்கிறார்கள்.
ஒரு சிலர் பதவியைப் பெற்று இருந்து விட்டு, சுயநலம் காரணமாக விலகி இருக்கலாம், அவர்களை ஒருபோதும் குறை சொன்னது கிடையாது எனவும் தெரிவித்தார்.
அதைப் பற்றி ஒன்றுமில்லையெனத் தெரிவித்த அவர், ஓடுகின்ற ஆற்று தண்ணீரில் ஒரு கைத்தண்ணீரை எடுத்துவிட்டு ஆற்றையே எடுத்து விட்டோம் எனச் சொல்வதை போலத்தான் இது எனவும், லட்சோப லட்சம் தொண்டர்கள் உறுதியாக எங்களுடன் இருக்கிறார்கள் எனவும் தெரிவித்தார்.
1993 ல் எடுத்த முடிவின் படி இன்னமும் உறுதியாக இருப்பது மதிமுக எனவும், மக்களுக்காகத் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது எனவும் தெரிவித்தார். திராவிட இயக்கத்தைப் பாதுகாக்க வேண்டும், இந்துத்துவா சக்திகள் உள்ளே நுழைய விடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கின்றோம் எனவும் தெரிவித்தார்.
பயணிகள் ரயில் கட்டண உயர்வு என்பது கண்டிக்கதக்கது, ஏற்கனவே மக்கள் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறார்கள், இந்த நேரத்தில் மேலும் அவர்கள்மீது கட்டண உயர்வைக் கொண்டு வருவதை தவிர்க்க வேண்டும், இதை நாங்கள் கடுமையாக எதிர்க்கின்றோம் எனவும் வைகோ தெரிவித்தார்.