கல்வி உரிமையை பறிக்கும் தனியார் மருத்துவக் கல்லூரி நிர்வாகம் – இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்..!
காஷ்மீர் இளைஞரின் கல்வி உரிமையைப் பறிக்கும் கோவை தனியார் மருத்துவக் கல்லூரி நிர்வாகம்மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திய மாணவர் சங்கம், மற்றும் ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காஷ்மீர் பள்ளத்தாக்கை சேர்ந்த டாக்டர்.சுபைர் அகமது என்பவர் நீட் தேர்வில் தேர்ச்சிப் பெற்று, இரண்டாவது கலந்தாய்வு மூலம் சிறுநீரகவியல் துறையில் உயர் கல்விக்கான இடம் கோவையில் சித்ரா பகுதியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் ஒதுக்கப்பட்டது.
இதையடுத்து சேர்க்கைக்காக வந்த மாணவர் சுபைர் அகமதுவை கட்டாயமாகத் தாடியை எடுக்க வேண்டும் எனவும், இதுகுறித்து எழுதிக் கொடுக்கவும் கல்லூரி நிர்வாகம் நிர்பந்தம் செய்துள்ளது.
இதுகுறித்து ஜம்மு காஷ்மீர் மாணவர்கள் சங்கம் சார்பில் தமிழ்நாடு முதல்வருக்குக் கடிதம் எழுதினர். கோவை தனியார் மருத்துவக் கல்லூரியில் தாடி வைத்திருந்ததால் இடம் மறுக்கப்பட்டதற்கு கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது.
இந்நிலையில் கோவையில் மருத்துவ உயர் கல்வி படிக்க வந்த காஷ்மீர் இளைஞர் கல்வி உரிமையைப் பறித்த தனியார் மருத்துவமனை நிர்வாகம்மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திய மாணவர் சங்கம் மற்றும் ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட பொருளாளர் தினேஷ்ராஜா கூறியதாவது: இந்திய அரசியல் அமைப்பில் உள்ள மாணவரின் அடிப்படை உரிமையைக் கோவை தனியார் மருத்துவ கல்லூரி நிர்வாகம் மறுத்துள்ளது.
உடனடியாக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு மாணவருக்கு அதே கல்லூரியில் இடம் வழங்க வேண்டும் அல்லது மூன்றாவது கலந்தாய்வு நடந்தி வேறு கல்லூரி இடம் வழங்க வேண்டும். மேலும் மாணவரிடம் கல்லூரி நிர்வாகம் பெற்ற ரூ.2 லட்சம் கட்டணத்தைத் திரும்ப வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர்.