கோவை தொண்டாமுத்தூர் அருகே சிறுத்தை நடமாட்டம் – கண்காணிக்க கேமராவை பொருத்தம்
கோவை தொண்டாமுத்தூர் குப்பேபாளையம் வன எல்லையில் சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க வனத்துறையினர் இன்று கண்காணிப்பு கேமராவை பொருத்தினர்.
கோவை மருதமலை, தொண்டாமுத்தூர், மதுக்கரை, தடாகம், உள்ளிட்ட வனப்பகுதிகளில் காட்டு யானைகள் மற்றும் சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் உள்ளது.
இதில் சமீப காலமாக மதுக்கரை வனச்சரகம் மற்றும் கோவை வனச்சரக வன எல்லைகளில் சிறுத்தை நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இவ்வாறு வன எல்லைகளுக்கும் வரும் சிறுத்தைகள் ஆடு, நாய், மாடுகளை வேட்டையாடுகிறது.
இந்நிலையில் போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட தொண்டாமுத்தூர் வனப்பகுதியிலிருந்து வெளியேறிய சிறுத்தை ஒன்று குப்பேபாளையம் வன எல்லையில் உலா வந்தது.
ஆனால் அப்பகுதியில் சோலார் மின் வேலி அமைக்கப்பட்டு இருந்ததால், சிறுத்தை ஊருக்குள் வர முடியாமல் அங்கு இங்கும் உலா வந்தது. நீண்ட நேரத்திற்கு பிறகு அந்தச் சிறுத்தை மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது.
இந்நிலையில் வனப்பகுதியிலிருந்து வெளியேறிய சிறுத்தை வன எல்லையில் உள்ள சக்திவேல் என்பவரது வீட்டின் அருகே உலா வந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.
இந்நிலையில் சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க, வனத்துறையினர் கண்காணிப்பு கேமராவை பொருத்தினர்.
இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், இதையடுத்து வன எல்லைப் பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்கும் பொருட்டு காமிரா பொருத்தப்பட்டு இரவு பகலாகக் கண்காணிக்கப்பட்டும், சிறப்புக் குழு அமைத்தும் வனப்பணியாளர்களால் ரோந்துப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.மேலும் கோவை வனச்சரகம், மதுக்கரை வனச்சரகத்திற்குட்பட்ட வன எல்லைப் பகுதிகளிலும் சிறுத்தை நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இன்று வரை சிறுத்தையினால் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை.