சரக்கு ஆட்டோ மோதி 9 ஆம் வகுப்புப் பள்ளி மாணவி பரிதாபமாக உயிரிப்பு!
கோவை உக்கடம் கெம்பட்டி காலணி அருகே சரக்கு ஆட்டோ மோதி 9 ஆம் வகுப்புப் பள்ளி மாணவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மதுக்கரை அறிவொளிநகர் பகுதியைச் சேர்ந்தவர் பாலன் மனைவி சாவித்ரி. இவர் மாநகராட்சியில் தூய்மை பணியாளராகப் பணியாற்றி வருகிறது. இவரது மகள் சவுமியா (15). உக்கடம் கெம்பட்டி காலணி, ஒக்கிலியர் வீதியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில் நேற்று வழக்கம்போலச் சவுமியா பள்ளி முடிந்து, கெம்பட்டி காலணியில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு வந்தார். பின்னர் மீண்டும் அறிவொளிநகர் பகுதியில் உள்ள வீட்டிற்குச் செல்ல அங்கிருந்த சாலையைக் கடக்க முயன்றார்.
அப்போது அவ்வழியாக வந்த சரக்கு ஆட்டோ சிறுமி மீது மோதி இழுந்துச் சென்றது. இதில் சாலை ஓரத்தில் இருந்த கல்லில் சிறுமியின் தலை மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து தகவலறிந்து வந்த வெரைட்டிஹால் போலீஸார் சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சரக்கு ஆட்டோ ஓட்டி வந்த நபரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே சிறுமி சவுமியா பூப்படைந்து 20 நாட்களே ஆன நிலையில் உறவினர்கள் கண்முன்னே சிறுமியின் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் கெம்பட்டி காலணி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.