கோயம்புத்தூர், நீலகிரிக்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை விடுப்பு – வானிலை ஆய்வு மையம்
தமிழ்நாட்டில் இன்று (ஜூன் 26) கோயம்புத்தூர் மற்றும் நீலகிரியில் ஒருசில இடங்களில் மிகப் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்காலிலும் இன்று (ஜூன் 26) முதல் ஜூலை 1-ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், ஓரிரு இடங்களில் மணிக்கு 50 கி.மீ. வேகத்தில் தரைக்காற்று வீசக்கூடும்.
ஆரஞ்சு எச்சரிக்கை: கோயம்புத்தூர், நீலகிரி மாவட்டங்களில் இன்று (ஜூன் 26) ஓரிரு இடங்களில் மிக பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேபோல் தேனி, தென்காசி ஆகிய மாவட்டங்களிலும் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னை, புகா் பகுதிகளில் இன்று (ஜூன் 26) இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
மழை அள்வு பதிவு: தமிழ்நாட்டில் புதன்கிழமை காலை வரை அதிகபட்சமாகக் கோயம்புத்தூர் மாவட்டம் சின்னக்கல்லாறு பகுதியில் 90 மி.மீ. மழைப் பதிவானது. வால்பாறை (கோவை) – 80 மி.மீ., சின்கோனா (கோயம்புத்தூர்), சோலையாறு (கோயம்புத்தூர்), பாா்சன்ஸ்வேலி (நீலகிரி) – தலா 70 மி.மீ., அவலாஞ்சி (நீலகிரி), மேல் பவானி (நீலகிரி) – தலா 60 மி.மீ. மழைப் பதிவானது.
இரு இடங்களில் வெயில் சதம்: தமிழகத்தில் புதன்கிழமை பரவலாக மழை பெய்ததால், பெரும்பாலான இடங்களில் வெப்பநிலை100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் குறைவாகவே பதிவானது. எனினும் அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 102.2 டிகிரி ஃபாரன்ஹீட்டும், தஞ்சாவூரில் 100.4 டிகிரி ஃபாரன்ஹீட்டும் வெப்பநிலை பதிவானது.
மீனவா்களுக்கான எச்சரிக்கை: இதற்கிடையே வியாழன், வெள்ளி (ஜூன் 26, 27) ஆகிய இரு நாள்கள் தமிழக கடலோர பகுதிகள், மன்னாா் வளைகுடா மற்றும் வங்கக் கடலில் மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இதனால், மீனவா்கள் அந்தப் பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது