தமிழ்நாடு வழியாக இயக்கப்படும் ரயிலில் தமிழ்மொழி புறக்கணிப்பு – தபெதிக ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு வழியாக இயக்கப்படும் எர்ணாகுளம் – பெங்களூரு விரைவு ரயிலில் தமிழ்ப் பெயர்ப் பலகையைப் புறக்கணித்துள்ள ஒன்றிய ரயில்வே துறையைக் கண்டித்து, ரயில் பெட்டியில் தமிழ்ப் பெயர்ப் பலகையை ஒட்ட முயன்ற தபெதிகவினரை காவல்துறை கைது செய்தனர்.
கேரளா மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து பெங்களூரு வரை இயக்கப்படும் இண்டர்சிட்டி விரைவு ரயில், தமிழகத்தில் 300 கிலோ மீட்டர் செல்கிறது. இந்நிலையில் இந்த ரயிலில் இந்தி, மலையாளம், கன்னடம், ஆங்கிலத்தில் மட்டும் பெயர்ப் பலகைகள் ஒட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் அதிக தூரம் தமிழகம் வழியாகச் செல்லும், இந்த ரயிலில் தமிழ் மொழியில் பெயர்ப் பலகையை ஒட்டாமல் புறக்கணித்துள்ள ஒன்றிய ரயில்வே துறையைக் கண்டித்து ரயிலில் தமிழ்ப் பெயர்ப் பலகையை ஒட்டும் போராட்டத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஈடுபட்டனர்.
முன்னதாக கோவை ரயில் நிலைய நுழைவு வாயிலுக்கு, தமிழ்ப் பெயர்ப் பலகையுடன் வந்த தபெதிக அமைப்பினரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து ஒன்றிய அரசைக் கண்டித்தும், ரயில்வே துறையைக் கண்டித்தும் அவ்வமைப்பினர் கோசங்களை எழுப்பினர்.
இதையடுத்து காவல்துறையிடம் தடையை மீறி ரயிலில் பெயர்ப் பலகை ஒட்டச் செல்ல முயன்ற தபெதிக பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோரை காவல்துறை கைது செய்தனர்.