Top Storiesஅரசியல்

நான் திராவிடர் தான், இதில் என்ன சந்தேகம் – வானதி சீனிவாசன்

முருக பக்தர் மாநாட்டிற்கு பிறகு அதிமுக, பாஜக இடையிலான கூட்டணி இன்னும் வலுபெற்றுள்ளதாக சட்டப் பேரவை உறுப்பினர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

கோயம்புத்தூர் பீளமேட்டில் உள்ள பாஜக அலுவலகத்தில் இன்று கட்சியினர் சார்பில் எமர்ஜென்சி அமல்படுத்தப்பட்டு 50 ஆண்டு நிறைவு தினம் கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி நடந்த புகைப்பட கண்காட்சியை பாஜக தேசிய மகளிர் அணி தலைவியும், கோயம்புத்தூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் பார்வையிட்டார்.

அப்போது அவர் கூறுகையில், “முருகன் மாநாட்டால் அதிமுக – பாஜக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை. எப்போதும் அதிமுக – பாஜக கூட்டணி குறித்தே பேச வேண்டுமா? எங்கள் கூட்டணி நன்றாக உள்ளது. திமுக ஆட்சி அகற்றப்படுவது உறுதி. கூட்டணி ஆட்சி குறித்து அமித் ஷா தெளிவாக பேசி விட்டார். சட்டப் பேரவைத் தேர்தல் கூட்டணிக்கு அதிமுக தான் தலைமை தாங்குகிறது” என்றார்.

திராவிடம் என்பது நிலப்பரப்பு. இங்கு வாழக்கூடிய மக்கள் திராவிடர்கள். இது ஒரு தனிப்பட்ட தத்துவமாக இந்தியாவின் பிற பகுதிகளுக்கு ஒப்பிடாத இதை எடுத்துக் கொள்ள முடியாது. நான் திராவிடர் தான், இதில் என்ன சந்தேகம். இந்த மேடையில் அமர்ந்திருக்க கூடிய அனைவரும் திராவிடர்கள் தான். கன்னடம், மலையாளம், தெலுங்கு, தமிழ் என அனைவரும் திராவிடர்கள்தான். 

திராவிடம் என்ற பெயரால் மொழிகளுக்கு இடையே பிரிவினையை ஏற்படுத்துவது, குறிப்பிட்ட சமூகத்தை இழிவுப்படுத்துவது, இந்து மக்களின் உரிமைகளை இழிவுப்படுத்துவது அல்ல. இந்தப் பகுதியில் வாழ்கின்ற மக்கள், எந்த சமுதாயத்தை சார்ந்தவர்களாக இருந்தாலும், எந்த மொழியில் பேசினாலும், திராவிடர்கள் என்று நாங்கள் நம்புகின்றோம். 

தொடர்ந்து எமர்ஜென்சி குறித்து பேசிய அவர், “1974 ஆம் வருடம் ஜூன் 25 ஆம் தேதி மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி மூலம் செயல்படுத்தப்பட்ட எமர்ஜென்சி இன்றுடன் 50 ஆண்டுகள் நிறைவடைகிறது. நெருக்கடியான அந்த காலகட்டத்தில் இந்திய ஜனநாயகம் எப்படி இருந்தது? என்பது குறித்து இளைஞர்களிடம் எடுத்துக் கூறுவதற்காக இந்த கண்காட்சி மற்றும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

காங்கிரஸ் கட்சி ஒரு குறிப்பிட்ட குடும்பத்திடம் எப்போதும் அதிகாரம் இருக்க வேண்டும் என்பதற்காக செயல்பட்டது. ஆனால் அவசர நிலை கால கட்டத்தில் தான் இன்றைய முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உள்பட திமுகவினர் கொடுமைகளை அனுபவித்தார்கள

அரசியல் கட்சியினர் சிறைகளில் மிக மோசமாக நடத்தப்பட்டார்கள். எதற்காக நாங்கள் இதைச் சொல்கிறோம். கடந்த கால வரலாற்றை மறக்கக் கூடாது. இதற்காக காங்கிரஸ் கட்சி இதுவரை மன்னிப்பு கேட்கவில்லை. இது போன்ற நிகழ்வுகள் இனி நடத்தக் கூடாது என்பதை மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த நிகழ்ச்சி நடத்துகிறோம்” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய வானதி சீனிவாசன், “தமிழ்நாட்டில் பல இடங்களில் பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது. வகுப்பறைகள் வசதியில்லை. மாணவிகளுக்கு கழிப்பறை இல்லை.

மத்திய அரசு அனைவரும் ஒரே மாதிரியான கல்வி அறிவு பெற வேண்டும் என விரும்புகிறது. காங்கிரஸ் ஆட்சி செய்த காலங்களில் கல்விக்கான அடிப்படை வசதியை அமைக்கவில்லை.

இப்போது தான் வட மாநிலங்கள் உள்பட பல இடங்களில் அடிப்படை வசதி ஏற்பட்டு வருகின்றன. தேசிய கல்விக் கொள்கையை அனைவரும் வரவேற்கிறார்கள். நாங்கள் யாருக்கும் பாகுபாடு காட்டவில்லை. தமிழை அதிகமாக கற்றுக் கொடுக்கக் கூடிய சூழ்நிலையை திமுக அரசு ஏற்படுத்த வேண்டும்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!