கோவையில் அரசு வருவாய்த் துறை அலுவலர்கள் பணியைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டம்!
அரசு வருவாய் அலுவலர்களுக்குச் சிறப்புப் பணிப் பாதுகாப்பு சட்டம் உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவையில் சுமார் 1500 வருவாய்த் துறை அலுவலர்கள் பணி விடுப்பு மற்றும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர்களுக்குச் சிறப்புப் பணிப் பாதுகாப்பு சட்டத்தை இயற்ற வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், பணிச் சுமையைக் குறைக்க வேண்டும் உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் வருவாய்த் துறை சங்கங்களில் கூட்டமைப்பினர் பணியைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாகக் கோவை ஆட்சியர் அலுவல வளாகத்தில் கோவை மாவட்டத்தில் பணி புரிந்து வரும் கிராம நிர்வாக அலுவலர்கள், வட்டாட்சியர்கள் உள்ளிட்ட வருவாய்த் துறை அலுவலர்கள் சுமார் 1500 பேர் இன்று பணியைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அப்போது தங்களது கோரிக்கைகள் குறித்து மாநில நிர்வாகிகளை அரசு அழைத்துப் பேசி உடனடியாக தீர்வு காண வேண்டும் எனக் கோரி கோசங்களை எழுப்பினர்.
இது குறித்து மாநில துணைப் பொதுச்செயலாளர் செந்தில்குமார் கூறும் போது: தமிழ்நாடு முழுவதும் வருவாய்த் துறை அலுவலர்கள் தற்செயல் விடுப்பு எடுத்து, பேரணியுடன் கூடிய தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பணிச் சுமையில் வருவாய்த் துறை அலுவலர்கள் அல்லாடி வருகின்றனர்.
அதனைக் குறைக்க மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப காலி பணியிடங்களை ஏற்படுத்தி, அதனை நிரப்ப வேண்டும், வருவாய் ஊழியர்கள் பணி மிக முக்கியமான பணி, மேலும் கருணை அடிப்படையிலான பணிகளை மீண்டும் வழங்க வேண்டும்.
மாநில ஒருங்கிணைப்புக் குழுவை அழைத்துப் பேசி எங்கள் கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், தேர்தல் நேரம் உங்கள் எங்களது பணியின் முக்கியத்துவத்தை அரசு உணர்ந்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் இல்லை என்றால் அடுத்த கட்ட போராட்டத்தை நோக்கிச் செல்வோம் எனத் தெரிவித்தார்.