Follower -யை அதிகரிக்க பெண்களின் ஆபாச படம் பதிவேற்றிய நபர் கைது!
இன்ஸ்டாகிராமில் பாலோவர்களை அதிகரிக்கச் செய்யப் பெண்களின் ஆபாச புகைப்படங்களைப் பதிவேற்றம் செய்து வந்த பொறியியல் பட்டதாரியைக் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது புகைப்படங்களை ஆபாசமாகச் சித்தரித்து, அருண்குமார் என்ற பெயரில் உள்ள இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளதாகவும், அந்த நபரைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோயம்புத்தூர் மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். புகார் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது போலியான இன்ஸ்டாகிராம் ஐடி-யை பயன்படுத்தி, புகைப்படங்களைப் பதிவேற்றம் செய்து வந்தவர் செங்கல்பட்டு மாவட்டம் வீராபுரத்தை சேர்ந்த ராஜா (33) என்பது தெரியவந்தது. பொறியியல் பட்டதாரியான ராஜா, சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் டேட்டா என்ட்ரி ஆபரேட்டராக வேலை செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் ராஜா, அருண்குமார் என்ற பெயரில் போலியான இன்ஸ்டாகிராம் பக்கத்தைத் துவக்கி அதில் பல்வேறு இணையதளங்களில் பதிவிறக்கம் செய்த பெண்களின் ஆபாசப் படங்களைப் பதிவேற்றம் செய்து வந்துள்ளார்.
மேலும் இன்ஸ்டா பக்கத்தில் பாலோவர்களை அதிகரிக்கச் செய்ய சில பாலோவர்கள் அனுப்பும் பெண்களின் ஆபாச புகைப்படங்களை கமெண்ட்களுடன் பதிவு செய்து வந்துள்ளார்.
இவர் எதிர்பார்த்தது போல சுமார் 20,000க்கும் மேற்பட்டோர் ராஜாவின் போலி instagram கணக்கை பின் தொடர்ந்து வந்துள்ளனர். அவ்வாறு இன்ஸ்டா மூலம் ஒருவர் அனுப்பிய கோவையைச் சேர்ந்த பெண்ணின் புகைப்படத்தை ஆபாச கமாண்டுகளுடன் ராஜா பதிவு செய்ததும் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து ராஜாவைக் கைது செய்த கோயம்புத்தூர் மாநகர சைபர் கிரைம் போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இன்ஸ்டா பக்கத்தில் பாலோவர்களை அதிகரிக்கச் செய்யப் பெண்களின் ஆபாசப் படங்களைப் பதிவேற்றம் செய்து வந்த பொறியியல் பட்டதாரி கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.