நாங்கள் இருந்த இடத்திற்கு அருகில் உள்ள நகரத்தில் தான் போர்: ஈரானில் இருந்து வந்த தொழிலாளர்கள் கூறிய தகவல்!
இஸ்ரேல் – ஈரான் போர் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், ஈரானில் பணியாற்றி வரும் கோவை, ஈரோடு, சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் பத்திரமாகக் கோவை விமான நிலையம் வந்தடைந்தனர்.
இஸ்ரேல்- ஈரான் நாடுகளுக்கு இடையே போர் நிலவி வரும் சூழலில் இந்திய அரசு இரண்டு நாடுகளிலும் உள்ள இந்தியர்களை இந்தியாவிற்கு வரவழைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி நேற்று பல்வேறு இந்தியர்கள் ஈரானிலிருந்து இந்திய அரசின் நடவடிக்கையால் வந்துள்ளனர்.
அனைவரும் டெல்லி வந்தடைந்த நிலையில் அங்கிருந்து ஒவ்வொருவரும் விமான மூலம் அவரவர் ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அதன்படி கோவை மற்றும் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று பேர் விமானம் மூலம் கோவை வந்தடைந்தனர்.
இதுகுறித்து பேட்டியளித்த சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த குணபாலன், யாஸ் என்ற இடத்திலிருந்து வந்துள்ளோம் என்றும் டெக்ஸ்டைல் நிறுவனத்தில் பணியாற்றியதாகவும் கூறினார்.
நாங்கள் இருந்த இடத்திற்கு அருகிலிருந்த நகரத்தில் தான் அந்த போர் பதற்றம் ஆனது நிலவியது என்று தெரிவித்தார். நாங்கள் அங்கிருந்து வரும் விமான கட்டணம் உணவு தங்கும் விடுதி ஆகிய அனைத்து செலவுகளையும் அரசே ஏற்றுக் கொண்டது என்றும், நாங்கள் பணியாற்றிய நிறுவனமும் எங்களுக்கு மிகவும் உறுதுணையாக இருந்து பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர் என்றார்.
பின்னர் பேசிய கோவையைச் சேர்ந்த பத்மநாபன், யாஸ் என்ற இடத்தில் டெக்ஸ்டைல் நிறுவனத்தில் பணியாற்றி வந்ததாகவும் போர்ப்பதற்கும் நிலவியதால் இங்கு வரவேண்டிய சூழல் ஏற்பட்டதாகத் தெரிவித்தார். இந்திய அரசு பாதுகாப்பாக எங்களை அழைத்து வந்தது எங்களது நிறுவனமும் எங்களைப் பாதுகாப்பாகப் பார்த்துக் கொண்டனர் என்றார்.
மத்திய அரசு முழுப்பொறுப்பையும் ஏற்று எங்களை அழைத்து வந்தது தமிழ்நாடு அரசு தொடர்பு எண்களை எல்லாம் கொடுத்து எங்கள் குடும்பத்தினர்களுடனும் பேசி மிகவும் உதவிக்கரமாக இருந்தனர் என்றார்.
இந்திய அரசு அங்கு ஒரு குழு அமைத்தனர் அந்தக் குழுவில் நாங்கள் அனைவரும் இணைந்து அவர்கள் அறிவுரையின் படி இங்கு வந்துள்ளோம் என்றார்.
.