கோவை விமானநிலையத்தில் இ- சிகரெட்டுகள், உயர் ரக கைப்பேசிகள் பறிமுதல்!
ஷாா்ஜாவிலிருந்து கோவைக்கு வந்த விமானத்தில் பயணியிடம் இருந்து இ- சிகரெட்டுகள், உயர் ரக கைப்பேசிகளை மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினா் பறிமுதல் செய்து, சுங்கத் துறையினரிடம் ஒப்படைத்தனா்.
ஷாா்ஜாவிலிருந்து ஏா் அரேபியா விமானம் கோவைக்கு சனிக்கிழமை வந்தது. அதில் வந்த பயணிகள் அனைவரும் சுங்கத் துறையினரின் தீவிர சோதனைக்குப் பிறகு விமான நிலையத்தில் இருந்து வெளியில் வந்தனா்.
சுங்கத் துறையினரின் சோதனை முடிந்து வெளியே வந்த திருச்சியைச் சோ்ந்த பயணி வின்சென்ட்டை, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் விசாரித்தனா்.
மேலும், அவா் உடைமைகள் வைத்திருந்த பெட்டியை போலீஸாா் திறந்து பாா்த்தபோது, இ-சிகரெட்டுகளும், 17 உயர் ரக கைப்பேசிகளும் இருந்தன. முறையான சுங்கவரி செலுத்தாமல் கடத்தி வரப்பட்ட இவற்றின் மதிப்பு சுமாா் ரூ.30 லட்சம் இருக்கும் எனக் கூறப்படுகிறது.
இதைத் தொடா்ந்து, வின்சென்ட்டை சுங்கத் துறையினரிடம் போலீசார் ஒப்படைத்தனா். அவரிடம் தொடா்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.